தலைவி கங்கனாவை கைது செய்ய வேண்டும்! கொதிக்கும் கட்சிகள்! காரணம் என்ன?
மும்பை: தலைவி திரைப்பட நடிகை கங்கணா ரனாவத் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரஸாக குரல் கொடுத்துள்ளன.
மேலும், பத்மஸ்ரீ விருதையும் அவரிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் கங்கணா ரனாவத்தின் சுதந்திரம் தொடர்பான கருத்து தான். 1947-ம் ஆண்டு பெறப்பட்டது பிச்சையே தவிர சுதந்திரம் இல்லை என்றும் 2014-ம் ஆண்டு தான் உண்மையான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது எனவும் அவர் பேசியதன் விளைவாக வம்பை விலைக்கு வாங்கிக் கட்டிக்கொண்டார் அவர்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, கங்கணா ரனாவத்திடம் இருந்து பத்மஸ்ரீ விருதையும், தேசிய விருதுகளையும் திரும்பப்பெற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற உயர் விருதுகளை கொடுப்பதற்கு முன்னர், அதை பெறக் கூடியவர்களின் உளவியலை மதிப்பீடு செய்ய வேண்டியது முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.
கங்கணா ரனாவத் தெரிவித்துள்ள கருத்து வெட்கக்கேடானது என்றும் அதிர்ச்சியளிக்கக் கூடியது எனவும் அவர் சாடியிருக்கிறார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், சந்திரசேகர் ஆசாத், ஜவஹர்லால் நேரு போன்ற தேசத்தலைவர்களை அவமரியாதை செய்யும் வகையில் கங்கணா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதனிடையே கங்கணா ரனாவத் போதையில் இப்படி உளறியிருக்கிறார் என அவரை கடுமையாக சாடியிருக்கிறார் மஹாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக். கங்கணாவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை திரும்ப பறிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மலானா கிரீம் என்ற போதை வஸ்தை உட்கொண்டால் இப்படித்தான் பேசத்தூண்டும் என கங்கணாவை விமர்சித்துள்ளார் நவாப் மாலிக்.
நடிகை கங்கணா ரனாவத் மீது மும்பை போலீஸ் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத் கட்சியும் வலியுறுத்தியுள்ளது. இதேபோல் சிவசேனா முக்கிய தலைவரான நீலம் கோர்கே, கங்கணா நிச்சயம் தேசத்துரோக வழக்கை விரைவில் சந்திப்பார் என எச்சரிக்கை விடுத்துளார்.












Click it and Unblock the Notifications