"சினிமா கூட தோத்துடும்!" புனே கார் விபத்தில் சிறுவனை காப்பாற்ற மருத்துவர்கள் செஞ்ச வேலை- இருவர் கைது
மும்பை: புனேவில் கடந்த வாரம் நடந்த போர்ஷே கார் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை மாற்ற முயற்சிகள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் போலீசார் இரண்டு மருத்துவர்களைக் கைது செய்தனர்.
புனேவில் கடந்த வாரம் போர்ஷே காரை மதுபோதையில் இயக்கி வந்த புனே தொழிலதிபரின் மகன் சாலையில் சென்ற பைக் மீது அதிவேகமாக மோதியுள்ளான். இதில் பைக்கில் பயணித்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் கைது செய்யப்பட்டான். முதலில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அது சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது.
பெரிய ட்விஸ்ட்: இந்தச் சம்பவத்தில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய சிறுவனைக் காப்பாற்ற டிரைவரை சரணடைய வைக்கச் சிறுவனின் குடும்பத்தினர் முயன்றுள்ளனர். விபத்து நடந்த போது காரை ஓட்டியதாகப் பழியை ஏற்கும்படி டிரைவரிடம் சிறுவனின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக பெரும் தொகையைப் பணமாகத் தருவதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து புனே போலீசார் தனியாக விசாரணை செய்து வருகிறார்கள்,
மருத்துவர்கள் கைது: இதற்கிடையே இதில் அடுத்து ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. அதாவது 17 வயது சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் அவனிடம் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.. இதற்கிடையே சிறுவனைக் காப்பாற்ற அந்த இரத்த பரிசோதனை முடிவுகளை மாற்ற முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தான் இரண்டு மருத்துவர்களை இப்போது புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் நடக்கலாம் என்பதாலேயே புனே போலீசார் விபத்து நடந்த சில மணி நேரத்திலேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் ரத்த மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். முதல் ரிப்போர்ட்டில் குளறுபடிகள் ஏற்பட்டால் இரண்டாவது மாதிரியை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்து இருந்தனர். போலீசார் எதிர்பார்த்தது போலவே ரத்தப் பரிசோதனை முடிவுகளில் குளறுபடியை ஏற்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன.
புனே போலீசார்: இந்த விவகாரத்தை புனே போலீசார் மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளனர். குற்றவாளிக்குத் தகுந்த தண்டை வாங்கி தர அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகிறார்கள். புனே தொழிலதிபரின் மகனான இந்த 17 வயது சிறுவன் விபத்து நடந்த உடன் தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் பேசியுள்ளான். அது தொடர்பாகத் தகவல்களையும் ஆதாரத்திற்காக போலீசார் சேகரித்துள்ளனர். மேலும், சிறுவனின் தாத்தாவுக்கு பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உடனும் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது: மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் பிளஸ் 2 முடிவுகளை வெளியான நிலையில், அதைக் கொண்டாடவே புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் 17 வயது மகன் தனது நண்பர்களுடன் பப் சென்று மது குடித்துள்ளான். அதைத் தொடர்ந்து அதிவேகத்தில் தனது காரை ஓட்டி சென்ற அந்த சிறுவன், சாலையில் சென்ற பைக்கில் மோதியுள்ளான். இதில் பைக்கில் சென்று கொண்டிருந்த அனீஷ் அவதியா (24), அஷ்வினி கோஷ்டா (25) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications