மகாராஷ்டிரா தேர்தல் முறைகேடு? ராகுல் காந்தி புகாருக்கு ஃபட்னாவிஸ், ஷிண்டே, தேர்தல் ஆணையம் பதிலடி
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் "முறைகேடுகள்" நடந்ததாக ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உண்மைகளைத் திரித்துக்கூறி, மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மக்களால் நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இப்போது மக்களின் முடிவையே நிராகரிப்பதாக ஃபட்னாவிஸ் கூறினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மகாராஷ்டிர மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளுக்கு ஃபட்னாவிஸ் மறுப்பு
தேவேந்திர ஃபட்னாவிஸ், ராகுல் காந்தியின் "போலி வாக்காளர்கள்" குறித்த குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான பதிலை அளித்துள்ளார். இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த கால போக்குகளுடன் ஒத்துப்போகிறது என்றும் விளக்கி உள்ளார். 26 லட்சத்துக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த விரிவான கடிதத்தை ராகுல் காந்தி படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 2024ஆம் ஆண்டில் வாக்காளர் எண்ணிக்கையில் அசாதாரணமான உயர்வு எதுவும் நடைபெறவில்லை.. ராகுல் காந்தி நினைப்பது போல் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்றும் ஃபட்னாவிஸ் கூறினார்.

தேர்தலின் கடைசி நேரத்தில் அதிக வாக்குகள் பதிவானது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்ற கூற்றையும் முதலமைச்சர் ஃபட்னாவிஸ் நிராகரித்தார். இது உண்மை இல்லை என்றும் அவரின் பேச்சு சிரிப்புக்குரியது என்றும் விமர்சித்தார். அதிக வாக்குப்பதிவு எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் சாதகமாக சென்று உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அர்த்தமற்றவை என்றும் பொது நம்பிக்கைக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் குறிப்பிட்டார்.
ஷிண்டே மற்றும் நட்டா பதிலடி
ராகுல் காந்தியின் கூற்றுக்களை துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆகியோரும் நிராகரித்தனர்.
மகா யுதி கூட்டணி மகாராஷ்டிரா தேர்தலில் பெற்ற வெற்றியை துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சுட்டிக்காட்டி ராகுல் காந்திக்கு கடும் பதிலடி கொடுத்தார். மகாராஷ்டிரா குறித்து ராகுல் காந்தி எப்படி பொய் சொன்னார் என்பதை ஐந்து ட்வீட்களில் நட்டா விவரித்தார். அதில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிரா வழியாகச் சென்றும் மக்கள் அவரை ஆதரிக்கவில்லை என்று ஷிண்டே கூறினார்.
இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் சாசன மாற்றங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டது. ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு விரக்தியில் இருக்கும் ராகுல் காந்தி போலியான கதைகளை உருவாக்குகிறார், ராகுல் காந்தி உள்நோக்கம் இல்லாமல், ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு செய்கிறார். என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ், ராகுல் காந்தி தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது, மகாராஷ்டிரா மாநிலத்தையே அவமதிக்கும் செயல் என்றும், இதனை மகாராஷ்டிரா மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். நாளிதழ் ஒன்றில் ஃபட்னாவிஸ் எழுதிய கட்டுரையில், ராகுல் காந்தியின் புகார்கள்.. மக்களை குழப்புவதற்கே முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், ராகுல் காந்தி பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும், தேர்தல் ஆணையர் நியமனங்களை காங்கிரஸ் கட்சி கையாண்ட விதத்தை விமர்சித்தும் இருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அவை ஆதாரமற்றவை என்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை என்றும் கூறியது. இந்திய தேர்தல்கள் சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் அளவு மற்றும் துல்லியத்திற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைத்து நிலைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தவறான தகவல்களைப் பரப்புவது சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், தேர்தல்களில் கடுமையாக உழைக்கும் தேர்தல் ஊழியர்களின் மன உறுதியையும் குறைக்கும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லையென்றால், தேர்தல் ஆணையத்தை குறை கூறுவது அபத்தமானது. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளையும் இது அவமதிக்கும் செயல் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications