"இன்னும் 2 மணிதான் டைம்! அதுக்குள்ள வரலைனா.." எம்எல்ஏக்களுக்கு பறந்த கடிதம்! ஆக்ஷன் மோடில் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிர அரசியல் சூழல் பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முக்கிய கடிதம் பறந்துள்ளது.
மகாராஷ்டிர அரசியல் சூழலில் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கே போட்டி கொடுக்கும் அளவுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. இரு நாட்களுக்காக அங்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது.
மற்ற மாநில கூட்டணி ஆட்சிகளைப் போல இல்லாமல் சுமார் 3 ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசியலில் குழப்பங்களைத் தொடங்கி வைத்தவர் ஏக்நாத் ஷிண்டே.

ஷிம்டே
தானேவில் சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், திடீரென நேற்று மாயமானர். முதலில் அவருடன் சேர்ந்து 15 முதல் 20 எம்எல்ஏக்கள் வரை மாயமானதாகச் சொல்லப்பட்டது. அதேநேரம் தன்னிடம் 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகக் குறிப்பிட்ட ஏக்நாச் ஷிண்டே, சிவசேனா தலைமையிடம் தனக்குப் பிரச்சினை இல்லை என்றும் கூறி இருந்தார். அதேநேரம் அவர் பாஜக உடன் சிவசேனா கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

குழப்பம்
இந்தச் சூழலில் மாயமானதாகக் கருதப்பட்ட சில சிவசேனா எம்எல்ஏக்கள் இன்று கட்சியின் தலைமை அலுவலக்திற்கு திரும்பினர். மேலும், தங்களைக் கடத்தி சென்றதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள அரசியல் சூழல் குறித்து சிவசேனா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பெரும் குழப்பமான அரசியல் சூழல் அங்கு நிலவி வரும் நிலையில், இன்று மாலை சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் கூட்டம்
மாலை 5 மணிக்கு மும்பையில் உள்ள முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் இதில் கலந்து கொள்ளத் தவறினால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த கடிதம் அனைத்து சிவசேனா எம்எல்ஏக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நடவடிக்கை பாயும்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரே, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், "இன்று மாலை 5 மணிக்கு இந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் கட்சியை விட்டு வெளியேற நினைக்கிறீர்கள் என்று கருதப்படும்.. மேலும் கட்சி விதிமுறைகளின் கீழ் உங்கள் அடிப்படை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்
இன்று மதியம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர சட்டசபை கலைக்கப்படலாம் என்றும் முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்யலாம் என்றெல்லாம் கூட தகவல் பரவியது. இந்தச் சூழலில் தான் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இதுபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நம்பர் கணக்கு
கடந்த 2019 சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105 இடங்களில் வென்ற போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களை அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பாஜக மற்றும் சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த நீண்ட கால கூட்டணி முறிந்தது. 288 எம்எல்ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்று இருந்தன. பாஜக உடன் கூட்டணியை முறித்த நிலையில், மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல்வரானார்.












Click it and Unblock the Notifications