மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு சறுக்கல்.. அடித்து ஆடும் இந்தியா கூட்டணி.. இந்தியா டுடே சர்வே முடிவுகள்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்த முறையை விட வரும் தேர்தலில் கடுமையான பின்னடவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
லோக்சபா தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள்தான் எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எனினும் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகியதும், மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில், செய்தி ஊடகங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ், இந்தியா டுடே உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல், மாநிலவாரியாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு: அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 லோக்சபா தொகுதிகளில் 22 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், சரத்வாரின் புதிய கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 26 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
வாக்கு சதவீதம் எவ்வளவு?: அதாவது, காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களில் வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதம் என எடுத்துக்கொண்டால் இந்தியா கூட்டணிக்கு 45 சதவிகிதமும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 40 சதவித வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது மகராஷ்டிர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பாஜக மட்டும் 23 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது சிவசேனா கட்சியில் பிளவு ஏற்படவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா 18 இடங்களில் வென்று இருந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications