பாஜகவை அலறவிட்ட அதிமுக- “இந்தியா” கூட்டணியில் இணையுதா? சரத்பவார் என்ன சொன்னார் தெரியுமா? பரபர!
மும்பை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட அண்ணா திமுக, எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியில் இணையுமா என்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனான தொடர் மோதலின் உச்சமாக, அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: இருப்பினும் அதிமுகவின் இந்த முடிவு குறித்து பாஜக டெல்லி தலைவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். ஒருவேளை அதிமுகவை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் இணைக்க விரும்புகிறதா பாஜக என்கிற கேள்வியை இந்த மவுனம் எழுப்பி இருக்கிறது. ஏனெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது பெரிய கட்சி அதிமுக. அந்த கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் அதிமுகவா?: இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திரும்பி இருப்பதாக அறிவித்துள்ள அண்ணா திமுக, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியான "இந்தியா" அணியில் இணையுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. "இந்தியா" கூட்டணியில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றுள்ள நிலையில் அதிமுக எப்படி சாத்தியம் என்ற கேள்வி இயல்பானதுதான்.
பரம எதிரிகளின் சங்கமம்: ஆனால் கேரளாவில் ஆளும் சிபிஎம்-ன் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். தமிழ்நாட்டில் திமுக- அதிமுக போலதான். ஆனால் இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில்தான் இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிரி கட்சியாக இருப்பது சிபிஎம். ஆனாலும் இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில்தான் இருக்கின்றன. பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு தோல்வியை தரக் கூடிய வகையில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. ஆனாலும் ஆம் ஆத்மியும்தான் இந்தியா கூட்டணியில் இருக்கிறது; ஆகையால் மாநிலத்தில் எதிரி கட்சிகளாக இருந்தாலும் "இந்தியா" கூட்டணியில் ஒன்றாகத்தான் நிற்கின்றன. அதனால் பாஜகவை அதிமுக உறுதியாக எதிர்த்தால் "இந்தியா" கூட்டணியின் கதவுகள் திறப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
அதிமுக சேர்க்கப்படுமா? சரத்பவார் கருத்து: இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவருமான சரத்பவாரிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக பதிலளித்த சரத்பவார், "இந்தியா" கூட்டணியில் மிக முக்கியமான கட்சி திமுக. ஆகையால் திமுக மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கலந்து ஆலோசிக்காமல் அதிமுகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என்றார். இந்தியா கூட்டணியில் தற்போதைய நிலையில் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது. தற்போது அதிமுகவை முன்வைத்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications