உடையும் இந்தியா கூட்டணி? மத்திய அமைச்சராகும் சுப்ரியா சுலே? கொளுத்திப்போட்ட காங்கிரஸ்! பதிலடி
மும்பை: சரத்பவார் அல்லது அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆஃபராக வழங்க பேசப்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதற்கு சுப்ரியா சுலே பதிலடி கொடுத்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனால் ‛‛இந்தியா'' கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட மொத்தம் 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் நிலையில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்கிடையே தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வராகி உள்ளார். இதுஒருபுறம் இருக்க ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள கட்சிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ஆனால் சரத்பவாரை மட்டும் யாரும் விமர்சனம் செய்யவில்லை.
மாறாக அவர் மீது சாப்ட்கார்னர் காட்டுகின்றனர். அதோடு‛‛இந்தியா'' கூட்டணி உருவான பிறகு சரத்பவார் பிரதமர் மோடியுடன் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடியும், ‛‛காங்கிரஸ் கட்சியால் சரத்பவாருக்கு பிரதமர் வாய்ப்பு கைநழுவி போனதாக பேசினார். இதனால் சரத்பவாரை பாஜக தனது கூட்டணிக்கு இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவுடன் கைகோர்த்தாலும் கூட சரத்பவார், தனது அண்ணன் மகன் அஜித்பவாரை சமீபத்தில் ரகசியமாக சந்தித்து பேசினார். இது குடும்ப விஷயம் தொடர்பான சந்திப்பு என சரத்பவார் கூறினார். அதோடு தன்னை சில நலன்விரும்பிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட கூறுகின்றனர். நான் பாஜகவுடன் சேரப்போவது இல்லை என தெரிவித்தார்.
சரத்பவார் இப்படி விளக்கம் அளித்தாலும் கூட இன்னும் குழப்பம் தீரவில்லை. மகாராஷ்டிரா எதர்க்கட்சி கட்சி தலைவர் விஜய் வடித்வார் கூறுகையில், ‛‛ஏன் அஜித் பவார் அடிக்கடி சரத்பவாரை சந்தித்து பேசி வருகிறார். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை 2 ஆக பிரிந்த நிலையில் பாஜக மாநிலத்தில் நல்ல நிலையை எட்டியுள்ளது. மேலும் சரத்பவாரின் உதவியை பாஜக விரும்புகிறது. அவரது ஆதரவு இருந்தால் மகாராஷ்டிராவில் அதிக தொகுதிகளை கைப்பற்றலாம் என பாஜக நினைக்கிறது. மேலும் அஜித் பவாருக்கு மகாராஷ்டிரா முதல் பதவியை வழங்க மோடி தயாராக இருக்கிறார். சரத்பவாரின் மனதை மாற்றி பாஜக பக்கம் இழுத்து வந்தால் முதல்வர் பதவி தருவதாக அவர் கூறியிருக்கலாம். இதனால் தான் அஜித் பவார் அடிக்கடி சரத்பாவாரை சந்திக்கிறார்'' என தெரிவித்து இருந்தார்.

மேலும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பிருத்வி ராஜ் சவான் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அல்லது அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆஃபர் வழங்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஓரணியில் உள்ள நிலையில் அவரது இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் சரத்பவாரின் மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பதிலடி கொடுத்தார். அதோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிருத்விராஜ் சவானின் குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார். இதுதொடர்பாக சுப்ரியா சுலே கூறியதாவது: காங்கிரஸ் கட்சியினர் ஏன் இப்படி ஒரு தகவலை வெளியிடுகின்றனர் என்பதை சுயபரிசோதனை செய்து கொ்ள வேண்டும்.
ஏனென்றால் அவர் கூறுவது போல் பாஜகவிடம் இருந்து எனக்கு எந்த சலுகையும் வரவில்லை. பாஜகவினர் யாரும் என்னுடன் பேசவில்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ஏன் இப்படி பேசுகின்றனர் என்பதை அவர்களிடமே நீங்கள் கேட்க வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கவுரவ் கோகோய் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மகாராஷ்டிரா மாநில தலைவர்களுடன் தொடர்பில் இல்லை'' என பதிலடி கொடுத்தார். இதனால் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ள நிலையில் ‛‛இந்தியா'' கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications