சரத் பவார் மட்டுமே இல்லைனா.. அமித் ஷா ஜெயிலில்தான் இருந்து இருப்பார்! அட்டாக் மோடில் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கரே தரப்பு சிவசானா காட்டமாக விமர்சித்து உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பாஜக தொடர்ச்சியாக ஆட்சியை அமைத்து வருகிறது. தேர்தல்களில் பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கிறது.
அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஷிண்டே தரப்பு, பாஜக உடன் கூட்டணி அமைத்து இப்போது ஆட்சியைப் பிடித்து உள்ளது.

மகாராஷ்டிரா
கடந்த 2019இல் மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அக்கட்சிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. அப்போது கூட்டணியில் இருந்த பாஜக- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி உருவாகி ஆட்சி அமைத்தது. சுமார் 2.5 ஆண்டுகள் ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டு இருந்தது.

போர்க்கொடி
இந்தச் சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு, ஏக்னாத் ஷிண்டே தனது ஆதரவாளர்கள் உடன் கூட்டணி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இதனால் இந்த மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து பாஜக உடன் சிவசேனா ஆட்சியை அமைத்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து யார் ரியல் சிவசேனா என்பதில் ஷிண்டே தரப்பிற்கும் தாக்கரே தரப்பிற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

சிவசேனா
இந்நிலையில், சரத் பவார் உதவி செய்ததாலேயே மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு 2002 குஜராத் கலவர வழக்கில் ஜாமீன் கிடைத்தாக சிவசேனா கூறியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது. வழக்கமாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எழுதி வந்த ரோக்தோக் பகுதியில் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது. சஞ்சய் ராவத் இப்போது சிறையில் உள்ள நிலையில், கடக்நாத் மும்பைகர் என்ற பெயரில் கட்டுரை வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா
அந்த கட்டுரையில், "அமித் ஷா மகாராஷ்டிராவைப் பற்றித் தொடர்ந்து மோசமான கருத்துகளையே கூறி வருகிறது.இது மகாராஷ்டிரா மீதான அவரது வெறுப்பைக் காட்டுகிறது. உண்மையில், அவர் எப்போதும் மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்களுக்குக் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும். கோத்ரா தொடர்புடைய வழக்குகளில் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராகக் காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

சரத் பவார்
அப்போது சரத் பவார் மற்றும் மோடி இடையே நடந்த உரையாடல் விளைவாகவே கோத்ரா வழக்கு ஒன்றில் அமித் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்து. இதைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இது தான் உண்மை. அதேபோல மற்றொரு வழக்கில், அமித் ஷாவுக்கு பால்தாக்கரே உதவினார்,

தாக்கு
சஞ்சய் ராவத்திற்கு இவை குறித்துத் தெளிவாகவே தெரியும். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே இதைப் பற்றிப் பேசினால் புரியும். ஆனால் அதே அமித் ஷா இன்று சரத் பவார் மற்றும் தாக்கரேக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. பாஜக மற்றும் தாக்கரே இடையேயான மோதல் உச்சமடைந்து வரும் நிலையில், இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications