ஏக்நாத் ஷிண்டே உள்பட 54 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்க மறுப்பு.. மகாராஷ்டிரா சபாநாயகர் அதிரடி தீர்ப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பத்தில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் அம்மாநில சபாநாயகர் ராகுல் நார்வேகர் இன்று தீர்ப்பு அளித்துள்ளார். அதில் ஏக்நாத் ஷிண்டே தான் உண்மையான சிவசேனா எனக்கூறியதோடு 54 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய அவர் மறுத்து அதிரடியாக உத்தரவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக கொண்ட கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்தது.

ஆபரேசன் தாமரையால் சிவசேனா கட்சி 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் 40க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது.
பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்தது.
சிவசேனா யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சாதகமான முடிவை தந்தது தேர்தல் ஆணையம். அதற்கு முன்னதாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக்கூறி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கூறியது.
அதன்படி உத்தவ் தாக்கரே தரப்பில் ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேரையும், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உத்தவ் தாக்கரே வசம் உள்ள 14 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்படி மொத்தம் 54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கியுள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நார்வேகர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றமும் சபாநாயகருக்கு கடுமையாக பல முறை எச்சரிக்கை விடுத்து இறுதி முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் கெடு இன்றைய தினம் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தகுதி நீக்கம் செய்யக்கோரியது தொடர்பான தீர்ப்பை இன்று வழங்கினார் சபாநாயகர் ராகுல் நார்வேகர்.
தீர்ப்பில் ‛‛சிவசேனா தலைமை விஷயத்தில் சிவசேனா 2 அணிகளும் தேர்தல் ஆணையத்தில் இருவேறு தரப்பு வாதங்களை அளித்துள்ளன. மேலும் 2018ல் சிவசேனா தலைமை விஷயத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பான விதிகள் கட்சியின் விதிகளுக்கு பொருந்தாமல் உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. உத்தவ் தாக்கரேவுக்கு அவர் உள்பட யாரையும் நீக்கும் அதிகாரம் என்பது இல்லை. இது பிற எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும்’’ என தீர்ப்பு வழங்கினார்.
இதன்மூலம் உத்தவ் தாக்கரே வைத்த கோரிக்கையான ஏக்நாத் ஷிண்டே உள்பட 40 எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரே அணியின் 14 எம்எல்ஏக்கள் என 54 பேரையும் தகுதி நீக்க முடியாது என்பதை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
இது உத்தவ் தாக்கரே அணிக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உத்தவ் தாக்கரே முதலில் சிவசேனாவின் கட்சி சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் தேர்தல் ஆணையம் மூலம் இழந்தார். தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்எல்ஏக்களின் தகுதி நீக்க கோரிக்கையும் சபாநாயகர் மூலம் புறம்தள்ளப்பட்டுள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே அணி உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications