கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா வராது.. டிசிஎஸ் காட்டிய கணக்கால்.. ஷாக்கான ஐடி ஊழியர்கள்
மும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் புனே வளாகங்களில் இருந்து 376 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு அம்மாநில சட்ட மேலவைக்குத் தெரிவித்துள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் "தி ஃபோரம் ஃபார் ஐடி எம்ப்ளாயீஸ் (FITE)" என்னும் அமைப்பு இந்த எண்ணிக்கை முழுக்க முழுக்க பொய்யானது என்று கூறி உள்ளது.
அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உமா காப்ரே, பிரவீன் தாரேகர், பிரசாத் லேட் ஆகியோர் ஐ.டி. துறையில் நடைபெறும் பணிநீக்கங்கள் குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, கேள்வி நேரத்தில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டது. புனே, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் சுமார் 30,000 டிசிஎஸ் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்க்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகாஷ் ஃபண்ட்கர், 376 பணிநீக்கங்கள் நடந்து உள்ளன. இது குறித்த விவரம் டிசிஎஸ் நிறுவனத்திடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது என்றும், இது நடப்பு நிதியாண்டின் இரண்டு காலாண்டுகளில் நீக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை என்றும் உறுதிப்படுத்தினார். மேலும், டிசிஎஸ் தனது புனே வளாகங்களில் தற்போது 45,575 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது என்பதையும் அவர் அவைக்குத் தெரிவித்தார்.
டிசிஎஸ் பொய்யான கணக்கு
ஆனால் மகாராஷ்டிராவில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் "தி ஃபோரம் ஃபார் ஐடி எம்ப்ளாயீஸ் (FITE)" என்னும் அமைப்பு இந்த எண்ணிக்கை தவறானது என்றுள்ளது. அரசு வெளியிட்ட எண்ணிக்கையை மறுத்தது. சமீப மாதங்களில் இதைவிட அதிகமான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அது குற்றம்சாட்டியது. FITE அமைப்பின் தலைவர் பவன்ஜித் மானே, "இந்த எண்ணிக்கை முற்றிலும் தவறானது. 376 ஊழியர்கள் என்பது குறைவான எண்ணிக்கை.. கிட்டத்தட்ட 2,000 முதல் 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்" என்று கூறி உள்ளார்.
FITE அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, அரசு அளித்த தரவுகள் முறையான பணிநீக்கங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளன. மேலும், இக்குழு "சைலன்ட் லே ஆப்" என்று குறிப்பிடும், புதிய முறையை கையாள்வதாக குற்றஞ்சாட்டி உள்ளது.
சைலன்ட் லே ஆப்
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் "சைலன்ட் லே-ஆப்" அதிக அளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது யாரையும் மொத்தமாக பணி நீக்காமல்.. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவராக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஆகும் இது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 50,000 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தானாக முன்வந்து வெளியேறியதாக டிசிஎஸ் தெரிவித்ததையும் மானே கேள்வி எழுப்பினார். அவர்கள் தானாக வெளியேறவில்லை, பிரஷர் கொடுத்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்று FITE நிபுணர்கள் கூறுகின்றனர். அமைப்புசாரா பணிநீக்கங்கள் மற்றும் கட்டாய ராஜினாமாக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக FITE தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஃபண்ட்கர், இந்த பணிநீக்கங்கள் மீடியம் லெவல் மற்றும் மேனேஜர் பொறுப்புகளில் மட்டுமே நிகழ்ந்ததாகவும், செயற்கை நுண்ணறிவு அல்லது தானியங்குமயமாக்கலுடன் இவை தொடர்புடையவை அல்ல என்றும் டிசிஎஸ் தெரிவித்ததாக கவுன்சிலில் எடுத்துரைத்தார்.












Click it and Unblock the Notifications