ஒரு நிமிஷத்தில் 5¾ லட்சம் காலி.. விபூதி அடிக்கப்பட்ட தமிழ் நடிகை.. இப்படியுமா ஏமாறுவாங்க!
மும்பை: தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்த நடிகை அஞ்சலி பாட்டீலிடம், கூரியர் பார்சலில் போதைப்பொருள் வந்து இருப்பதாக கூறி, மிரட்டி ரூ.5¾ லட்சம் மோசடி செய்திருக்கிறார் மர்ம நபர் ஒருவர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்..
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் காலா. இந்த படத்தில் நடித்த நடிகை அஞ்சலி பாட்டீல் (வயது36). இவர் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் அஞ்சலி பாட்டீல் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகைக்கு பெட்டெக்ஸ் என்ற கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் போட்டிருக்கிறார். அவர் உங்களுடைய பெயரில் தைவான் நாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. அதை சுங்க துறையினர் கைப்பற்றி வைத்துள்ளார்கள். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள் என்று கூறியுள்ளார்.
கூரியரில் இருந்து பேசி முடித்த சில நிமிடங்களில் ஸ்கைப் மூலமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பானர்ஜி என்ற பெயரில் ஒருவர் நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் நடிகையிடம் உங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருக்கிறது.
இதுகுறித்து சரிபார்ப்பு பணி செய்ய ரூ.96 ஆயிரத்து 525ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். நடிகை அஞ்சலி பாட்டீலும் ஒரு நிமிடம் கூட உண்மையா அல்லது பொய்யா என்று யோசிக்காமல் அவர் கேட்ட பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். பின்னர் அவரே அழைத்து, வங்கி அதிகாரிகள் யாராவது உங்கள் ஆதார் கார்டை வைத்து முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், நீங்கள் பயப்பட வேண்டாம், அதுகுறித்து விசாரிக்க மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291ஐ செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அந்த பணத்தையும் நடிகை அஞ்சலி பாட்டீல் அனுப்பி வைத்திருக்கிறார்
இந்தநிலையில் அஞ்சலி பாட்டீல் நடந்த சம்பவம் குறித்து தனது வீட்டு உரிமையாளரிடம் கூறி, இப்படி ஆகிவிட்டது என்று வெள்ளந்தையாக கூறியிருக்கிறார். அவர் தான் அஞ்சலி ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மோசடியாக இருக்கலாம் என நடிகையை உஷார்படுத்தி இருக்கிறார். இதையடுத்து நடிகை அஞ்சலி பாட்டீல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து டிஎன் நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
மும்பை டிஎன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் நூதன முறையில் ரூ.5¾ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். கூரியர் பார்சலில் போதைப்பொருள் வந்து இருப்பதாக கூறி, மிரட்டி ரூ.5¾ லட்சம் மோசடி நடிகையிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மும்பையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications