மகாராஷ்டிராவை தொட முயன்றால்.. என்ன ஆகும் என்று பாருங்கள்! பேரணியில் கர்ஜித்த ராஜ்தாக்ரே
மும்பை: மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை கொண்டுவர பாஜக அரசு முயன்றது. இந்நிலையில் இதற்கு எதிராக தாக்ரே சகோதரர்கள் பேரணியை அறிவித்தனர். பேரணியில் பேசிய ராஜ்தாக்ரே, மகாராஷ்டிராவை தொட நினைத்தால் என்ன ஆகும் என்று பாருங்கள் என சவால் விட்டிருக்கிறார்.
பேரணிக்கு முன்னதாகவே, மாநில அரசு இந்தி மொழி குறித்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது. எனவே, கோரிக்கை பேரணி வெற்றி நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாக்ரே சகோதரர்கள் மேடையை பகிர்ந்துக்கொண்டனர். கடைசியாக இருவரும் கடந்த 2005ம் ஆண்டு மேடையை பகிர்ந்துக்கொண்டனர். அதன் பின்னர் இப்போதுதான் ஒரே மேடையில் இருவரும் இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்தாக்ரே பேசியதாவது, "பால்தாக்ரே செய்ய முடியாததை மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்திருக்கிறார். என்னையும் உத்தவ் தாக்ரேவையும் ஒன்றாக இணைத்திருக்கிறார். பட்னாவிஸ் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுக்கு சட்டமன்றத்தில் அதிகாரம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு மக்கள் மன்றத்தில் அதிகாரம் இருக்கிறது. மராத்தி மக்களின் வலுவான ஒற்றுமை காரணமாக தற்போது மும்மொழிக்கொள்கையை அரசு திரும்ப பெற்றிருக்கிறது.
மகாராஷ்டிராவை தொட நினைத்தால் என்ன ஆகும் என்பதை இப்போது பாருங்கள். இந்த மும்மொழி கொள்கை என்பது மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து தனியாக பிரிக்கும் சூத்திரம். அதற்கான முன்னோடி திட்டம்தான் இது" என்று கூறியுள்ளார்.
அதேபோல இது குறித்து உத்தவ் தாக்ரே பேசுகையில், "ராஜ் தாக்ரே இப்போராட்டத்தின் மூலம் எங்களுடன் இணைந்திருக்கிறார். நாங்கள் ஒன்றாகவே இருப்போம். இந்த விஷயத்தில் ஒன்று தெளிவாகியுள்ளது. எங்களுக்கு இடையேயான தூரத்தை நாங்கள் தூக்கி எறிந்துவிட்டோம். இந்த வெற்றி நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டதிலிருந்து மக்கள் எங்கள் உரைக்காக காத்திருந்தார்கள்.
என் பார்வையில், நாங்கள் இருவரும் ஒன்றாகி வருகிறோம். இந்த மேடை எங்கள் உரைகளை விட முக்கியமானது. ராஜ் ஏற்கனவே மிகச் சிறந்த உரையை நிகழ்த்தியுள்ளார். இப்போது நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன், இந்தியை திணிக்க விடமாட்டேன்" என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலை பொறுத்தவரை இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 2019 இம்மாநில சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி வைத்த வெற்றி பெற்றது. ஆனால் கருத்து முரண்பாடுகள் காரணமாக பாஜக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது சிவசேனா.
2022 வரை காங்கிரஸ் கூட்டணி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர், சிவசேனாவிருந்த ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். போதுமான ஆதரவு இல்லாததால் உத்தவ் தலைமையிலான சிவசேனா பெரும்பாண்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
அப்போது தனித்து விடப்பட்ட உத்தவ், மகாராஷ்டிரா அரசியலில் மிகுந்த கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில்தான் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரும், உத்தவ் தாக்ரேவின் சகோதருமான ராஜ் தாக்ரே 20 ஆண்டுகளுக்கு பிறகு, உத்தவ் தாக்ரேவுடன் சேர்ந்திருக்கிறார். எனவே இந்த வெற்றி நிகழ்ச்சி பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications