‛‛தனியே வெளியே வரவேண்டாம்’’.. ‛தி கேரளா ஸ்டோரி’ படக்குழுவை சேர்ந்தவருக்கு மிரட்டல்.. ஷாக் தகவல்
மும்பை: பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படக்குழுவை சேர்ந்தவருக்கு செல்போன் மெசேஜ் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5ம் தேதி ரிலீசானது. இந்த படத்தை ஹிந்தி திரைப்பட இயக்குனராக இருப்பவர் சுதிப்தோ சென் இயக்கி உள்ளார். கேரளாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது. இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து படக்குழு சில மாற்றங்களை செய்தது. அதாவது படத்தில் 32 ஆயிரம் பெண்கள் என்பதற்கு பதில் 3 பெண்கள் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் டீசர் தொடர்பான சமூக வலைதள பதிவுகளையும் நீக்கம் செய்வதாக படக்குழு கேரளா உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது. இதையடுத்து படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடுகிறது.
இந்த படம் தமிழ்நாட்டிலும் கடந்த 5ம் தேதி ரிலீசானது. ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் மேலும் திரைப்படம் திரையிடப்பட்டால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில் இந்த படம் வெளியானது. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவில் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் நாம் தமிழர் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதேபோல் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாலும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதாலும் மேற்கு வங்காளத்தில் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதன்மூலம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்த முதல் மாநிலம் மேற்கு வங்காளம் என்ற பெயரை பெற்றுள்ளது.
இவ்வாறு தினமும் ‛தி கேரளா ஸ்டோரி' குறித்த ஒவ்வொரு விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ‛தி கேரளா ஸ்டோரி' படக்குழுவை சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவரது செல்போனுக்கு மெசேஜ் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛படத்தின் கதையில் நல்ல விஷயத்தை காட்டவில்லை. வீட்டில் இருந்து தனியாக வெளியே வர வேண்டாம்'' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும் அவருக்கு போலீஸ் தரப்பில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் உறுதி செய்துள்ளார். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛இன்னும் எழுத்துப்பூர்வமாக புகார் பெறவில்லை. இதனால் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றனர்.












Click it and Unblock the Notifications