மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் குழப்பம்? "எனது தந்தை முதல்வராக தொடரணும்.." ஷிண்டே மகன் தடாலடி
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் இருந்த பாஜக தற்போது 127 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஷிண்டே சேனா 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக் கூட்டணியில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போதைய முதல்வர் ஏத்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பைத் தரும் மாநிலமான மகாராஷ்டிராவில் இப்போது சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்த முறை பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் இந்த முறை கடும் போட்டி இருக்கும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கு சுமார் 215 இடங்களில் முன்னிலை பெற்ற பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெறும் 65 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
அங்குத் தனிப்பெரும்பான்மைக்குக் குறைந்தது 145 இடங்களில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரம் பாஜக சுமார் 127 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், அவர்கள் தான் தனிப்பெரும் கட்சி என்பதில் சந்தேகமே இல்லை. பாஜக இல்லாமல் அங்கு ஆட்சி அமைவது ரொம்பவே கடினம். இந்தச் சூழலில் தான் அங்கு யார் முதல்வர் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
கடந்த காலம்: ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டு பாஜக- ஒருங்கிணைந்த சிவசேனா உடைந்ததே இதனால் தான். அந்தத் தேர்தலில் பாஜக 105 இடங்களில் வென்ற நிலையில், சிவசேனா 56 இடங்களில் வென்று இருந்தது. சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவியைக் கேட்ட நிலையில், அதற்கு பாஜக சம்மதம் தெரிவிக்காததால் தான் கூட்டணி உடைந்தது. முதல்முறையாகக் காங்கிரஸ்- என்சிபி உடன் சிவசேனா கைகோர்த்த நிலையில், உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த முறை பாஜக 100க்கும் குறைவான இடங்களில் வென்று இருந்தால் கூட ஷிண்டே முதல்வராகத் தொடர வாய்ப்பு இருந்து இருக்கும். ஆனால், பாஜக தனியாகவே கிட்டதட்ட 127 இடங்களில் முன்னிலை பெற்றுவிட்டது. இதனால் ஆட்சியை அமைப்பது எளிது. இதனால் இந்த முறை பாஜகவில் இருந்தே ஒருவர் முதல்வர் பதவிக்கு வருவார் எனத் தெரிகிறது. டெல்லி பாஜக தலைமையும் கூட அதே முடிவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் ஷிண்டே மிக முக்கிய கருத்து: இதற்கிடையே முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே பிரபல ஆங்கில ஊடகத்தில் பேசும் போது சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, மக்கள் இந்த முறை வளர்ச்சியை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்ப முயன்றதாகவும் அதையும் தாண்டி மக்கள் தங்களை வெற்றி பெற வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பால் தாக்கரேவின் கொள்கைகளை யார் நிஜமாகப் பின்பற்றுகிறார்கள் என்பதை உணர்ந்தே மக்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் அரசு கொண்டு வந்த லட்கி பெஹன் யோஜனா, அதாவது பெண்களுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்குப் பெண்களிடையே மிகப் பெரிய ஆதரவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
யார் அடுத்த முதல்வர்: தொடர்ந்து முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு ஸ்ரீகாந்த் ஷிண்டே, "எங்கள் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு யார் என்பதில் போட்டி இருந்ததே இல்லை. நாங்கள் செய்த சாதனைகளை முன்வைத்துத் தேர்தலை எதிர்கொண்டோம். அதில் வெற்றி கிடைத்துள்ளது. என்னைக் கேட்டால் எனக்கு எனது தந்தை முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்பதே விருப்பம். அதேநேரம் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து இறுதி முடிவை எடுப்போம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications