மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு உறுதி- சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது சிவசேனாவுக்கு பின்னடைவாகும்.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 16 சிவசேனா எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்களை ஜூலை 11 வரை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்திருந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என உத்தரவிட உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை உத்தவ் தாக்க்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மகாராஷ்டிரா சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூட இருக்கிறது.
இதனையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுகிறோம். உச்சநீதிமன்றத்தில் 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதம் என்றார்.
உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரா சட்டசபையின் சிவசேனா கொறடா சுனில் பிரபு, நாளைய நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தார். . 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பது சிவசேனா தரப்பின் கருத்து. சிவசேனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இம்மனுவை உடனே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்; இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றார். இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மாலையில் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை இல்லை என உத்தரவிட்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இது ஆளும் சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவாகும்.












Click it and Unblock the Notifications