பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் மகளுக்கு சிவராத்திரியில் பாலியல் தொல்லை-7 பேர் மீது கேஸ்!
மும்பை: பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் மகள், பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய இணை அமைச்சர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. அண்மையில் மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் அதிகாலையில் இளம் பெண் ஒருவர் ஏசி பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

இந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் அதே மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் மத்திய பெண் இணை அமைச்சரின் மகள் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜல்காவ் மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய பெண் இணை அமைச்சரின் மகளும் தோழிகளும் பங்கேற்றனர்.
இந்த சிவராத்திரி யாத்திரையில் பங்கேற்ற சிலர், மத்திய இணை அமைச்சரின் மகள் உள்ளிட்டோருக்கு 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை தந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் மத்திய இணை அமைச்சரின் மகள் உள்ளிட்டோரை போட்டோ, வீடியோ எடுத்தும் அச்சுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது என கூறினார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களோ, பாஜக ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லை; அப்படியானால் சாமானிய பெண்களின் நிலை என்னவாகும்? என கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications