சைக்கிளை குப்புற தூக்கி.. தொழிலாளியை கீழே தள்ளிய போலீஸ்.. ஒரு விஐபி வண்டிக்காக அடாவடி? வைரல் வீடியோ
மும்பை: நாட்டின் சாலைகளில் விஐபி வண்டிகள் செல்வதற்காக, சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கண்ணியமும் எந்த அளவுக்கு கேவலமாக மிதிக்கப்படுகின்றன என்பதற்கு புனேவில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் மீண்டும் சாட்சியாகியிருக்கிறது... போலீஸ்காரர் ஒருவர், யூனிபார்மில், அதிகார மமதையில், சைக்கிள் ஓட்டி வந்த நபரிடம் நடந்து கொண்ட விதம், ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
புனே நகரின் பரபரப்பான சாலையான P. D'Mello Road, Carnac Bunder பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. விஐபி பாதுகாப்பு வாகனம் ஒன்று செல்வதற்காக போக்குவரத்து போலீசார், மும்முரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது சைக்கிளில் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளி ஒருவர், அந்த வழியாக வந்துள்ளார்.

சைக்கிள் தொழிலாளி
சைக்கிளை பார்த்ததுமே, கொந்தளித்து போன டிராபிக் போலீஸார், உடனடியாக அந்த தொழிலாளியை தடுத்து நிறுத்தினார்கள்.. அவரது சைக்கிளையும் பிடுங்கி அலேக்காக ஓரமாக தூக்கி வீசிவிட்டார்கள்.. இதனால் அவர் கொண்டு சென்ற பொருட்கள் சாலையில் சிதறி விழுந்தன.. ஆனாலும் அதை பற்றி கண்டுகொள்ளாத போலீசார், அந்த தொழிலாளியை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக, பிடித்து தள்ளிவிட்டார்கள்..
இந்த சம்பவம், காரின் டேஷ்கேமராவில் அப்படியே பதிவாகி சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. MH12YJ3333 என்ற எண் கொண்ட அந்த விஐபி வாகனத்தின் பின்னணியும், அடாவடியாக நடந்து கொண்ட அந்த போலீஸ்காரரின் மனிதாபிமானமற்ற செயலும், நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளன. உடனடியாக தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
விஐபிகளுக்கு முன்னுரிமை
பொதுவாகவே, நம்முடைய இந்தியாவின் விஐபி கலாச்சாரம் என்பது இன்று நேற்றல்ல, பல வருடங்களாகவே எளிய மக்களின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாகும்... கோயில்கள் முதல் பொதுப்போக்குவரத்து வரை எங்கே பார்த்தாலும் விஐபிக்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் ஏழை எளியவர்கள் ஒதுக்கப்படுவதும், அடிமைகளை போல நடத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
அப்படியென்றால், பொது இடங்களில் வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் முட்டாள்களா? விஐபி என்பவர் வந்துவிட்டால் மட்டும் விதிகளும், முன்னுரிமைகளும் மாறிவிட வேண்டுமா?
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறைகூட, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையை அடியோடு மறந்துவிடுகிறார்கள்.. மாறாக, அதிகார வர்க்கத்தின் காலடியிலேயே விசுவாசத்தை மூட்டை மூட்டையாக கொட்டி கொண்டிருப்பதை தங்களது பிறவிப்பயனாகவே கருதிவிடுகிறார்கள்.
விஐபி கல்ச்சர்
அப்படித்தான் இந்த புனே சம்பவமும் நடந்துள்ளது.. இதுவும் ஒரு பொதுச்சாலைதான்.. வரி செலுத்தும் மக்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் பயன்படுத்தும் அதே சாலைதான். அப்படியிருக்கும்போது, ஒருவர் விஐபி என்பதற்காக அவருக்கு முன்னுரிமையும், இன்னொரு சாதாரண மனிதர் என்பதற்காக அவமதிப்பும் கிடைக்க வேண்டுமா? சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள உழைப்பாளியைப் பார்த்து மிரட்டுதே காவல்துறையின் வேலையா?
தவறு செய்த அந்த மனிதாபிமானமற்ற போலீஸ்காரர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.. அதுமட்டுமல்ல, இந்த விஐபி CULTURE க்கு முடிவு கட்டாவிட்டால், சாமானியர்களின் கோபம் இந்திய சாலைகளில் இன்னும் உக்கிரமாகவே வெடித்து கிளம்பும்...!!


Click it and Unblock the Notifications
