‛வாவ்’ சொல்ல வைக்கும் டெக்னாலஜி.. இந்தியாவின் பெருமையே ‛அடல் மேம்பாலம் தான்’.. இவ்வளவு சிறப்புகளா?
மும்பை: இந்தியாவில் மிகவும் நீளமாக மும்பையில் கட்டப்பட்டுள்ள ரூ.17,840 கோடி மதிப்பிலான கடல் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் என்பது மிகவும் வலுவான இரும்புகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஒலி, விளக்கு ஒளி உள்ளிட்டவற்றால் பறவைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் மிகவும் நீளமான கடல் மேம்பாலம் மும்பையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மும்பை டிரான்ஸ் ஹார்பர் என அழைக்கப்படும் இந்த மேம்பாலம் செவ்ரியில் இருந்து நவா ஷேவா இடையே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

8 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது 21.8 கிமீ நீளமுள்ள ஆறுவழி பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் என்பது கடலுக்கு மேலே 16.5 கிமீ நீளமும் நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் செல்கிறது. இதன்மூலம் இந்தியாவின் மிகவும் நீளமான கடல் மேம்பாலம் எனும் பெயரை பெற்றுள்ளது.
இந்த மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மேம்பாலம் என்பது அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பாலம் என அழைக்கப்படுகிறது. 2 துறைமுகம், 2 விமான நிலையங்களை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மூலம் மகராஷ்டிரா ராய்காட் மாவட்டம் பன்வெல்-செவ்ரி இடையேயான பயண தூரம் வெறும் 15 கிலோமீட்டராக குறையும். முதலில் இந்த இருஇடங்களுக்கும் இடையேயான பயண நேரம் என்பது 2 மணிநேரமாக இருந்த நிலையில் இப்போது 15 முதல் 20 நிமிடங்களில் செல்ல முடியும்.
இதுமட்டுமின்றி இந்த பாலம் மூலம் மும்பை-நவி மும்பையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு செல்வதற்கான நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் புனே, கோவா, தென்னிந்தியாவின் பிற இடங்களுக்கு செல்வதற்கான பயண நேரத்தை இந்த பாலம் வெகுவாக குறைக்கிறது. இந்த பாலத்தில் காருக்கு ஒரு வழிக்கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த மேம்பாலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையிலும், கடலுக்குள் இருந்தாலும் எத்தகைய பாதிப்பையும் சந்திக்காத வகையிலும் அமைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த மேம்பாலம் என்பது மும்பை துறைமுகம், ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை இணைக்கிறது. அதோடு மும்பை விமான நிலையம், நவி மும்பை விமான நிலையத்தை இணைக்கிறது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதோடு, எளிதில் பொருட்கள் இடமாற்றம் செய்யவும், மக்கள் துரித பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு பாலத்தில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 330 மீட்டருக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த பாலம் என்பது வலுவான இரும்பு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பு என்பது மிகவும் அதிகமாகும். அதாவது பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பை ஒப்பிடும்போது இது 17 மடங்கு அதிகமாகும். ஹவுரா மேம்பாலத்தை ஒப்பிட்டால் 4 மடங்கு அதிகமான இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் என்பது 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கும் சக்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான கட்டட வடிவமைப்பு பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தில் ஆளில்லா டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக், வாகன பதிவெண் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் உள்ளது. அதன்அருகே உணவகம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெளிநாடு, உள்நாடுகளின் பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன. ஆண்டுக்கு 1.5 லட்சம் பிளமிங்கோ பறவைகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தானேவில் பறவைகள் சரணாலயம் தான். இதனால் பறவைகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தாத வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதாவது பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விளக்குகள் பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் பார்வையை பறிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தில் செல்லும் வாகனங்களில் இருந்து ஒலி எழுப்புவது என்பது நீர்வாழ் உயிரினங்களுக்கு தொந்தரவு செய்யலாம். இதனை தடுக்க ஒலி அதிர்வுகளை குறைக்கும் வகையில் மேம்பாலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாலம் என்பது சுற்றுச்சூழல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்காக பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலத்தில் மிகவும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூடுபனி உள்பட பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகத்தை தாண்டினால் அந்த வாகனங்களை அடையாளம் காட்டி கொடுக்கும். இந்த மேம்பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பல தொழில்நுட்பங்கள் இந்தியாவில் முதல் முறையாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் கூட மேம்பாலத்தில் வாகனங்கள் ஏறிவிட்டால் ஏதேனும் அவசரம் என திரும்ப வர முடியாது. ஒருவேளை திரும்பி வர வேண்டும் என்றால் 22 கிலோமீட்டர் தூரத்தை பயணித்து தான் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications