அப்தாப் குடும்பத்திற்கு தெரியும்.. அவங்கள விசாரியுங்கள்! 35 பீஸாக வெட்டப்பட்ட ஷ்ரத்தாவின் தந்தை பரபர
மும்பை: ஷ்ரத்தா படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை விகாஸ் வாக்கர் சில பரபர கருத்துகளை முன்வைத்துள்ளார். மும்பை போலீசாரின் அலட்சியமே தனது மகளின் கொலைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் அரங்கேறிய ஷ்ரத்தா கொலை சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 27 வயதே ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாகக் கொலை செய்தார்.
அத்துடன் அவரது உடலை 35 பீஸாக வெட்டிய அந்த கொடூரன், தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களில் இதன் பாகங்களைப் போட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

டெல்லி படுகொலை
அப்தாபை பிரபல டேட்டிங் செயலியான பம்பிள் தளத்தில் ஷ்ரத்தா சந்தித்துள்ளார். கொஞ்ச நாட்களிலேயே இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் பேச்சைத் தாண்டி ஷ்ரத்தா தனது காதலனுடன் லிவ்-இன் உறவில் சென்றுள்ளார். இதனால் அவரது தந்தையுடன் சில ஆண்டுகளாகப் பேசக் கூட இல்லையாம். இருந்த போதிலும், ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கரால் தான் இந்த கொலை சம்பவமே வெளிச்சத்திற்கு வந்தது. அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே போலீசார் அப்தாப்பை கைது செய்தனர்

விகாஸ் வாக்கர்
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர் பல பரபர கருத்துகளைத் தெரிவித்தார். மகளின் மரணத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுவது இதுவே முதல்முறையாகும். அவர் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்தாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். எனது மகளை எப்படி கொன்றானோ அதேபோன்ற தண்டனை அவனுக்கும் மிகக் கடுமையான தண்டனையைத் தர வேண்டும். 18 வயதை எட்டும்போது இளைஞர்களுக்குச் சுதந்திரம் என்ற பெயரில் செய்வதை நாம் பரீசிலக்க வேண்டும்.

நான் சொல்லியும் கேட்கவில்லை
18 வயது நிரம்பும்போது குழந்தைகளுக்கு மனநல ஆலோசனைகள் தேவை. சில கட்டுப்பாடும் இருக்க வேண்டும். 18 வயதாகிவிட்டால் பிடித்ததைச் செய்ய உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டுத் தான் எனது மகள் வீட்டை விட்டு வெளியேறினாள். அவருக்கு என்ன நடந்தது என்பதை நாட்டிற்கே தெரியும். இதேபோல மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது. இதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். வீட்டிலிருந்து அவர் வெளியேறும் முன், நான் ஷ்ரத்தாவிடம் பேசினேன். அவர் (அப்தாப்) நமது சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை.. அவர் வேண்டாம் என நான் எவ்வளவோ முறை எடுத்துச் சொன்னேன்.

டேட்டிங் செயலி
ஆனாலும், நான் சொல்வதைக் கேட்காமல் அவர் கிளம்பிவிட்டார். டெல்லி போலீசார் இந்த விவகாரத்தை உரிய முறையில் தான் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், நான் முதலில் புகார் அளித்த போது, மகாராஷ்டிர போலீசார் இதை முறையாக விசாரிக்கவில்லை. அவர்கள் அதை சீரியஸாக எடுத்திருந்தால், என்னை மகள் உயிரைக் கூட காப்பாற்றியிருக்கலாம். எனது மகள் அப்தாப்பை டேட்டிங் செயலி மூலமே சந்தித்தார். இதுபோன்ற டேட்டிங் செயலிகளுக்கு இங்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் பலரும் இதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற செயலிகளுக்குக் கட்டுப்பாடுகள் தேவை" என்றார்.

குடும்பத்திற்குத் தெரியும்
அதேபோல கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அப்தாப் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அப்போது அப்தாப்பின் குடும்பத்தினருக்கு அவரது இந்த மூர்க்கத்தனமாக வன்முறை நடத்தை குறித்து தெரியும் என ஷ்ரத்தா தனது புகாரில் கூறியிருந்தார். அதேநேரம் சில நாட்களில் ஷ்ரத்தா மீண்டும் ஒரு கடிதத்தை போலீசாரிடம் சமர்ப்பித்திருந்தார். அதாவது அப்தாப்பின் குடும்பத்தினர் பேசிய பிறகு, இருவருக்கும் இடையே பிரச்சினை இல்லை என்றும் இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் தனது கடிதத்தில் கூறி இருந்தார்.

குடும்பத்தை விசாரிக்கணும்
ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மேலும் கூறுகையில், "போலீசார் அப்தாப்பின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரது அம்மா, அப்பா, சகோதரர்களிடம் விசாரிக்க வேண்டும். இந்தக் கொடூர சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துக் கண்டறிய வேண்டும். ஷ்ரத்தா கடைசியாகக் கடந்தாண்டு தான் என்னிடம் பேசினார். அப்போது பெங்களூரில் தான் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், வீட்டில் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டதோடு பேச்சையும் நிறுத்திக் கொண்டார். அதைத் தாண்டி எதுவும் பேசவில்லை.

நடந்தது என்ன
கடந்த சில மாதங்களாக ஷ்ரத்தா தனது சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிடாமல் இருந்தார். இதனால் சந்தேகமடைந்தே அவரது தோழிகளிடம் விசாரிக்கத் தொடங்கினேன். அப்போது தான் அவர்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பிறகே அப்தாப்பிடம் செப். 26இல் பேசினேன். எனது மகள் எங்கே எனக் கேட்டதற்கு கூலாக என்னை விட்டுச் சென்றுவிட்டார் எனப் பதிலளித்தார். எனது மகள் எங்கே சென்றார் எனக் கேட்டதற்கு அலட்சியமாகத் தெரியாது எனச் சொன்னார். அவரது பதிலால் சந்தேகம் கொண்டே நான் போலீசில் புகாரளித்தேன்" என்றார்.












Click it and Unblock the Notifications