5 மாதத்தில் 4 முறை பலாத்காரம்.. போலீஸ் எஸ்ஐ பெயரை உள்ளங்கையில் எழுதி அரசு பெண் டாக்டர் தற்கொலை
மும்பை: மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த பெண் திடீரென்று தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர் தற்கொலைக்கான காரணத்தை தனது உள்ளங்கையில் எழுதி வைத்துள்ளார். அதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடந்த 5 மாதத்தில் 4 முறை பாலியல் பலாத்காரம் செய்த மனஉளைச்சல் கொடுத்ததால் உயிரை மாய்த்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவை அதிர வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பெண் டாக்டர். இவர் சாதரா மாவட்டத்தில் உள்ள பல்தான் துணை மாவட்ட மருத்துவமனையில் மெடிக்கல் ஆபிசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பல்தான் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் அவர் நேற்று இரவு தூக்கில் பிணமாக தொங்கினார். ஹோட்டல் அறையில் அவர் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுபற்றி அறிந்த ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் பெண் டாக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அவர் தனது உள்ளங்கையில் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து இருந்தார். போலீஸ் அதிகாரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
அதில், ‛‛கடந்த 5 மாதத்தில் சப் இன்ஸ்பெக்டர் கோபால் படானே 4 முறை பலாத்காரம் செய்தார். தொடர்ந்து தொல்லை கொடுத்தார். அதேபோல் பிரசாந்த் பங்கர் என்பவரும் மனரீதியான தொல்லைகளை கொடுத்தார். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்'' என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். தற்போது போலீஸ் எஸ்ஐ கோபால் படானே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகன்கர் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் குறித்து தாமாகவே முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விடக்கூடாது'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications