சவுதியில் வேலை, சம்பளம்னு சொன்னா உஷார்! சோறு தண்ணீர் இல்லாமல் தவித்த 4 பெண்கள்.. மீட்ட மகளிர் ஆணையம்
மும்பை: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற பெண்கள், அங்குள்ள நபர்களால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மகளிர் ஆணையம் இவர்களை பத்திரமாக மீட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது வேலைகள் கிடைக்கிறது. ஆனால் போதுமான ஊதியம் கிடைப்பதில்லை. மட்டுமல்லாது அது நிரந்தரமில்லாத வேலையாகவும் இருக்காது. இப்படி இருக்கையில், வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க கிடைக்கும் வழிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிதான் சவுதி சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்கிற வாக்குறுதியை நம்பி பெண்கள் பலர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்று போலியான வாக்குறுதியை நம்பி சவுதி சென்று அங்கு கடும் துயரத்தை எதிர்கொண்ட 4 இந்திய பெண்களை, மகளிர் ஆணையம் பத்திரமாக மீட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஆனாலும் அங்கு கிடைக்கும் சொற்ப ஊதியம் குடும்ப கஷ்டத்தை எந்த விதத்திலும் போக்கவில்லை. இப்படி இருக்கையில், நல்ல சம்பளத்தில் வேறு ஒரு வேலையை தேடி வந்திருக்கிறார்.
அப்போதுதான் சந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அவர் மூலம் ஏஜென்ட் ஒருவர் பழக்கமாகியுள்ளார். சவுதியில் ரூ.35,000க்கு நல்ல வேலை வாங்கி தருவதாக அவர் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனையடுத்து இந்த பெண்ணும், தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த மற்ற இரண்டு பெண்களையும் அழைத்துக்கொண்டு சவுதி புறப்பட்டிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு ரியாத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
மற்ற இருவரும் ஹஃபர் அல் பாடினில் உள்ள வெவ்வேறு வீடுகளில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் சில நாட்கள் எல்லாம் சரியாகதான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை தலைகீழாய் மாறியுள்ளது. அதாவது, இந்த வீட்டின் உரிமையாளர்களால் இந்திய பெண்கள் பல நாட்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பேசப்பட்ட ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை.
இது குறித்து அப்பெண்கள் கூறுகையில், "நாங்கள் இரவு பகல் பாராமல் எந்நேரமும் வேலை செய்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டோம். நாங்கள் அவமதிக்கப்பட்டோம். எங்களுக்கு சாப்பிட போதுமான மற்றும் சரியான உணவு கொடுக்கப்படவில்லை. வீட்டின் உரிமையாளர்கள் எங்கள் மீது தாக்குதல்களை தொடுத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் இந்த தொல்லைகளை தாங்க முடியவில்லை. இதனையடுத்து எங்களை இங்கே அனுப்பிய முகவர்களை தொடர்புகொண்டோம்.
ஆனால் அவர்கள் முறையாக எந்த பதிலையும் கொடுக்கவில்லை. அடுத்த மாதம், அதற்கடுத்த மாதம் என எங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தனர். எனவே நாங்கள் இறுதியாக மகளிர் ஆணையத்தை நாடினோம்" என்று கூறியுள்ளனர். இந்த 3 பெண்களுடன் சென்னையை சேர்ந்த மற்றொரு பெண் என 4 பேரும் சேர்ந்து மகளிர் ஆணையத்தை தொடர்புகொண்டுள்ளனர். விஷயத்தின் தீவிர தன்மையை உணர்ந்த மகளிர் ஆணையம் உடனடியாக வெளியுறவுத்துறை மூலம் சவுதி அதிகாரிகளை அணுகியது.
இப்படியாக 3 மாத போராட்டங்களுக்கு பின்னர் மகாராஷ்டிராவை சேர்ந்த 3 பெண்களும், சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இத குறித்து மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகங்கர் கூறுகையில், "கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று எங்களுக்கு இதுதொடர்பான புகார்கள் வந்தன. இதனையடுத்து நாங்கள் உடனடியாக வேலையில் இறங்கினோம். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சகத்திற்கு தெரிவித்தோம். உடனே சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெண்களை அழைத்து வந்தனர்.
வெளிநாட்டில் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளில் பெண்கள் சிக்கி தவித்தால் அவர்கள் மகளிர் ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம். கடந்த சில நாட்களில், இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 பெண்கள் மத்திய கிழக்கிலிருந்து, முக்கியமாக ஓமனில் இருந்து இதேபோல் மீட்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications