"யார் கட்சி ஆரம்பித்தாலும் 2 அமாவாசைக்குதான் தாங்கும்!" திமுக ஆர்.எஸ். பாரதி பரபர.. யாரை சொல்கிறார்?
நாகை: திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறைமுகமாக விஜய்யை சாடும் வகையில் பேசினார். தமிழ்நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என்று கூறிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவை அனைத்துமே ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விஜய்யை மறைமுகமாகச் சாடும் வகையில் பேசியிருக்கிறார். அவரது பேச்சு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
திமுக நிகழ்ச்சி: நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் திமுகவில் இணைந்தனர். அங்கே உள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.
ஆர்எஸ் பாரதி: இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ் பாரதி, "எம்ஜிஆர் உயிருடன் இருந்த காலத்தில் அப்போது இருந்த மீனவர்கள் அதிமுகவில் தான் இருந்தார்கள். ஆனால், இப்போது இருக்கும் மீனவர்கள் வேறு.. தற்போதுள்ள மீனவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இப்போது திமுகவில் இணைந்து வருகிறார்கள். மீனவர்கள், மீனவ இளைஞர்கள் எல்லாம் இப்போது திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். திமுக தலைமைக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இரண்டு அமாவாசைகள்: இப்போதெல்லாம் யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. அவை எல்லாம் அதிகபட்சம் ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். அதற்கு மேல் தாங்காது. இப்போது கட்சி ஆரம்பிக்கும் நபர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டதை போல கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது" என்று அவர் தெரிவித்தார்.
ஆர் எஸ் பாரதியின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆர் எஸ் பாரதி தனது பேச்சில் யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அவர் விஜய்யைத் தான் மறைமுகமாகச் சொல்வதாக இணையத்தில் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். இது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய் அரசியல்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் தான் அவர் கட்சியைக் கொடியைக் கூட அறிமுகம் செய்திருந்தார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த மாதம் தி கோட் திரைப்படம் வெளியாகிறது. அதன் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிக்கும் விஜய், அதன் பிறகு தீவிர அரசியலில் இறங்க உள்ளார். அவர் 2026 சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக லோக்சபா தேர்தலுக்கு முன்பே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications