அண்ணாமலையா அது யாரு.. அன்னபூர்ணா உரிமையாளர் விவகாரம்.. ரொம்ப வருத்தம் பா.. அமைச்சர் கீதாஜீவன்
நாகப்பட்டினம்: கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மீது வேறு மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
கோவை, கொடிசியாவில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அவர் பேசுகையில், "ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது." என்று கூறினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா சீனிவாசனும் இருக்கிறார். அப்போது, அவர் நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்தான் மன்னிப்பு கேட்பதற்காக வந்தார். நாங்கள் மிரட்டி அவர் வந்ததாகவும், ஜாதி ரீதியாகவும் சிலர் சாயம் பூசுகின்றனர் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் உண்மையைச் சொன்னார். ஒரு தொழில் செய்வதால் அவர் நடைமுறையில் என்ன விதமான பிரச்னையை கூறியுள்ளார். அந்த மேடையிலேயே நிர்மலா சீதாராமன் இதனை சொன்னதற்கு நன்றி. நிச்சயமாக பன்னுக்கும், கிரீமுக்கும் உள்ள ஜிஎஸ்டியை நீக்குவேன் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நிதியமைச்சர் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்பது வருத்தமளிக்கிறது.
அண்ணாமலை மன்னிப்பு கேட்டது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, அண்ணாமலையா அது யாரு.. எனக்கு அதுபற்றி தகவல் தெரியவில்லை என்று கூறியுள்ளார். முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து கேட்டபோது, அவருடைய அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் கோடிக்கு மேல் புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள நிறுவனம் என்றாலும் முதலீடு புதிதுதானே. ஓரிரண்டு பழைய நிறுவனங்கள் உள்ளன. முதல்வரின் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் மகளிர் விடுதி, தனியார் விடுதிகளை முதல்வர் ஆய்வு செய்ய கூறியதையடுத்து, 150 விடுதிகள் உடனடியாக மூடப்பட்டன. சிலர் காலஅவகாசம் கேட்டுள்ளனர். சரிசெய்யாத விடுதிகளுக்கு ஆய்வு செய்தவுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தாலிக்குத் தங்கம் திட்டம் குறித்த கேள்விக்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படிக்க வைத்தால் உதவித் தொகை தருவதாக கலைஞர் அறிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி படித்தால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வழங்கப்படுவதால் தாலிக்குத் தங்கம் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications