நாகூர் தர்ஹா கந்தூரி விழா! 3 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு! -திருச்சி கோட்ட ரயில்வே
நாகை: நாகை மாவட்டம் நாகூா் தர்ஹா கந்தூரி விழாவையொட்டி யாத்ரீகர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு 3 ரயில்களில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் கந்தூரி விழா கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, திருச்சி - காரைக்கால் (06490), காரைக்கால் - தஞ்சாவூா் (06457), தஞ்சாவூா் - திருச்சி (06683) ஆகிய முன் பதிவற்ற ரயில்களில் டிச. 22, 23, 24 ஆகிய தேதிகளில் (3 நாள்கள்) கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (முன்பதிவற்ற பெட்டிகள்) இணைக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகூர் தர்ஹா கந்தூரி மட்டுமின்றி 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வேளாங்கண்ணிக்கும் அதிகமானோர் டிச.23, 24 தேதிகளில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாகூர் தர்ஹா கந்தூரி விழாவை ஒட்டி திருச்சி, தஞ்சையிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இதனிடையே நாகூர் தர்ஹா சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் ஆகியோரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications