வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாடுகளில் முதலீடா? மக்கள் முன் நேரடியாக கேட்ட விஜய்.. அதிர்ந்த நாகை!
நாகை: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி இருக்கிறார். சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான் திமுகவுக்கு முக்கியம் என்று விமர்சித்துள்ள விஜய், திமுக குடும்பத்தின் முதலீடுகள் வெளிநாட்டிற்கு செல்கிறதா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் 2ஆம் கட்டமாக நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்த விஜய், பின் சாலை மார்க்கமாக நாகை வந்தார். இதன்பின் பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய், மக்கள் வரவேற்புக்கு மத்தியில் ஊர்வலமாக வந்தார். 12.30 மணிக்கு நாகை அண்ணா சிலை ரவுண்டானா பகுதிக்கு வர வேண்டிய விஜய், சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்தார்.

இதன்பின் பொதுமக்கள் மத்தியில் விஜய் பேசுகையில், மீன் ஏற்றுமதியில் நாகை மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இதே நாகப்பட்டினத்தில் 2011இல் 14 வருடங்களுக்கு முன்னாள் மீனவர்கள் தாக்கப்பட்டதிற்காக பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்றேன். விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எப்போதோ வந்து விட்டேன். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்ட நாகை மாவட்டத்திற்கு ஏதேனும் திட்டங்களை திமுக கொண்டு வந்ததா? இதனைவிடவும் இந்த அரசுக்கு வேறு ஒரு வேலை இருக்கு.. அது என்ன தெரியுமா? சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான் அந்த முக்கியமான வேலை.. இங்குள்ள மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
கடல் சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வரலாம்? கொண்டு வந்தார்களா? வேலைவாய்ப்புக்காக தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா? ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்கு பயணம் சென்று வரும் போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு.. அத்தனை கோடி முதலீடு என்று முதல்வர் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே சொல்வாரே.. சிஎம் சார்.. மனதை தொட்டு சொல்லுங்கள்..
வெளிநாட்டு முதலீடா அல்ல வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் முதலீடா அல்லது உங்கள் குடும்ப முதலீடு வெளிநாட்டிற்கு செல்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்தார். இதனை விஜய் நேரடியாக சாடி இருப்பது அக்கட்சியினர் இடையே பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications