விஜயை கண்டித்து போஸ்டர் ஒட்டிய திமுக தொண்டர்.. வீடியோ எடுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ்! எதிர்பாரா முடிவு
நாகை: நாகை அருகே விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபரை வீடியோ எடுத்து தவெக நிர்வாகி பரப்பிய நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தவெக நிர்வாகிகள்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம், தமிழ்நாட்டின் அரசியல் சூழலைப் பெரிதும் அதிர வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்த சோக சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரின் 41 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டது. இந்த கொடுமையான நிகழ்வு நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணையை தொடங்கியது.

விஜய் எதிர்ப்பு சுவரொட்டி
இந்நிலையில், சம்பவத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டுமென்று தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வகையில் நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் உள்ள முக்கிய சுவர்களில் கரூர் சம்பவத்திற்கு காரணமான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் சுவரொட்டி ஒட்டிய நபரை வீடியோ எடுத்து யார் ஒட்ட சொன்னது என கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டதுடன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தவெக நிர்வாகி வீடியோ
அதனை தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த பரத்ராஜ் தன்னை மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது கீழையூர் காவல் நிலையத்தில் 29 ஆம் தேதி இரவு புகார் அளித்திருந்தார். இதனிடையே பரத்ராஜ் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்றுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் பரத்ராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபரீத முடிவு
இந்த நிலையில் பரத்ராஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பவிட்ட கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உட்பட அக்கட்சியினர் 4 பேர் மீது கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது பரத்ராஜ் புகார் அளித்த நிலையில் கீழையூர் போலீசார் அலட்சியம் காட்டியதால் பரத்ராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெக மீது வழக்கு பதிவு
மேலும் தலைமறைவாக உள்ள தமிழக வெற்றிக் கழக கீழையூர் ஒன்றிய செயலாளர் திவாகர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை பிடிக்க நாகை டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பரத் ராஜ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக செயல்படுவதும், போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications