கற்களை எடுத்து வீசி.. "பயங்கரமாக மோதிக்கொண்ட பாஜக - காங்கிரஸ் நிர்வாகிகள்.." பரபரத்த நாகர்கோவில்!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காங்கிரசாரும், பாஜகவினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மோதல் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து சென்றனர்.
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்தனர். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

சாலை மறியல் போராட்டம்
அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி கொடிகளை கையில் ஏந்தியடி பேரணியாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் வரை சென்றனர். தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அலுவலகத்திற்குள் காங்கிரஸ் கட்சியினர் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

5 பேர் காயம்
வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் காங்கிரசாரும், பாஜகவினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மோதல் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து சென்றனர். இந்த மோதலில பாஜகவை சேர்ந்த 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும் காயமடைந்தனர். காங்கிரஸ் - பாஜக கட்சியினர் இடையே நடைபெற்ற மோதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அண்ணாமலை கண்டனம்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:- நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை
தமிழக போலீஸ் உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications