"தர்மராஜ் அண்ணா இறங்கியது".. காங்கிரசுக்கு ஆதரவாக காயத்ரி போட்ட ட்வீட்.. கொதிக்கும் குமரி பாஜக
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜக சகோதரர்கள் காங்கிரஸ் போராட்டத்திற்குள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தியது இது மிகவும் வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாகர்கோயிலில் பாஜக அலுவலகத்திற்குள் காங்கிரசார் நுழைய முயன்றதால், பா.ஜனதாவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரசார் போராடி வருகிறார்கள். திங்கள்கிழமை மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரசார் சிலர் பாஜக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசாரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

பாஜக காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ் கட்சியிருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் திட்டிக் கொண்ட அவர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்க தொடங்கியது தொடர்பாக வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் கட்சி கொடி கட்டப்பட்டிருந்த தடியால் காங்கிரசார், பா.ஜனதாவினரை தாக்க, பதிலுக்கு அவர்கள் அவர்களிடம் இருந்த தடிகளை பிடுங்கி காங்கிரசார் மீதும் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வீடியோவில் இருந்தது.

4 பேர் காயம்
இந்த களேபரத்துக்கு இடையே பாஜக அலுவலகத்தின் மீதும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் காங்கிரசார் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவினர் கடும் கோபம் அடைந்து பதிலுக்கு அவர்களும் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணன், ஜெகநாதன் ஆகிய 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைசன், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக நாகர்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காங் சகோதரர்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவாக பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ராகுராம் ட்வீட் போட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜக சகோதரர்கள் காங்கிரஸ் போராட்டத்திற்குள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தியது இது மிகவும் வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ் அண்ணா போராட்டத்தில் இறங்கியது எதிர்பாராதது. இது பாஜக பெயரை பின்னுக்கு இழுக்கும்.

அது தவறு
யாராக இருந்தாலும் சரி மனித தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் வெவ்வேறு கட்சிகளில் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சகோதர சகோதரிகளாக நிம்மதியாக வாழ்கிறோம். யார் தாக்க ஆரம்பித்தார்களோ அது தவறு. கதைகளுக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கும், எப்போதும் விசாரிப்பது உண்மையைத் தரும்" இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.

ஏன் அப்படி
இதனிடையே காயத்ரி ரகுராமின் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடியின் மீது அவதூறு கருத்துக்களையும் சொல்லத் தகாத வார்த்தைகளையும் பேசி சத்தம் எழுப்பி பாஜக அலுவலகம் எதிரே அமர்ந்து தர்மாவில் ஈடுபட்டனர் என்றும் நமது மாவட்ட தலைவர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவே அங்கு சென்றார் எதுவும் பிரச்சனை இல்லாமல் இருக்கவே அவர் அவ்வாறு செய்தார் என்றும் பாஜகவைச் சேர்ந்த கணேசன் என்பவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்-












Click it and Unblock the Notifications