தோற்றது குழந்தைகளின் பாச போராட்டம்.. போலீஸ் ஸ்டேசனில் அடம்பிடித்து கள்ளக்காதலனுடன் சென்ற பெண்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குழந்தைகளால் பெரிய பாசபோராட்டமே நடந்தது. ஆனால் கள்ளக்காதலுக்கு முன்னால் பாச போராட்டம் தோற்றுப்போனது. கள்ளக்காதல் தான் எனக்கு வேண்டும் என்று கூறி, கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறி தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்காதல்கள் சர்வ சாதாரணமாகி வருகிறது. கணவனை பிடிக்காத மனைவியும், மனையை பிடிக்காத கணவனும், திருமணத்தை மீறிய உறவுகளை விரும்புகிறார்கள். இவர்களது காதலை சமூகம் ஒருபோதும் ஏற்பது இல்லை. பெற்றவர்களும் ஏற்க மாட்டார்கள் . ஆனால் சமுகத்தை மீறி, உறவுகளை மீறி இதை செய்கிறார்கள். பொதுவாக கள்ளக்காதல்கள் சுமூகமாக முடிவது இல்லை. சமுதாயத்தில் அழுக்காகவே முடிகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்ற குழந்தைகளை விட கள்ளக்காதலனே தனக்கு முக்கியம் என்று கூறி, கணவனையும், இரண்டு குழந்தைகளையும் ஒரு பெண் உதறி சென்றுள்ளார். காவல்நிலையத்தில் நடந்த பஞ்சாயத்தில், பாசத்தோடு அழைத்த குழந்தைகளிடம் போகாமல் கள்ளக்காதலனுடனே அந்த பெண் சென்றுவிட்டார். இதை பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் இடவிளாகம் பகுதியில் உள்ள கொத்தனார் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவருக்கு 29 வயது ஆகிறது. கொத்தனார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் லட்சுமியை (பெயர்மாற்றப்பட்டுள்ளது) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இரட்டை குழந்தைகள் ஆவார்.
கொத்தனார் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், லட்சுமி தனது 2 குழந்தைகளுடன் இடவிளாகத்தில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். அவர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவையெனில் பக்கத்தில் உள்ள தனது உறவினரான 27 வயதுடைய இளைஞரை அழைக்குமாறு ரமேஷ் கூறியிருந்தார். அந்த இளைஞருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அதை தொடர்ந்து அந்த இளைஞர் அடிக்கடி லட்சுமியின் வீட்டுக்கு வந்து சிறு, சிறு உதவிகளை அவ்வப்போது செய்து வந்தார். இந்த நிலையில் நாளடைவில் இளைஞருக்கும், லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இவர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் திடீரென ஒரு நாள் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தொலையாவட்டத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு லட்சுமி சென்றார். அங்கு குழந்தைகளை விட்டு விட்டு வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்ப வரவில்லை.
இதுகுறித்து லட்சுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனது குறித்து புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது, மாயமான இளம்பெண் கேரளாவில் ஒரு இளைஞருடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறினர்.
அதன்பேரில் நேற்று முன்தினம் லட்சுமி தனது கள்ளக்காதலனுடன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதுகுறித்து இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இளம்பெண்ணின் பெற்றோர் அவருடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள.
இளம்பெண்ணை கண்டதும் 2 குழந்தைகளும் 'அம்மா..' என அழைத்து கொண்டு ஓடிச்சென்று அணைக்க முயன்றுள்ளன. ஆனால் குழந்தைகளின் பாச போராட்டத்தை இளம்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இளம்பெண்ணின் பெற்றோர் அந்த குழந்தைகளை காட்டி கள்ளக்காதலனை விட்டுவிட்டு தங்களுடன் வருமாறு கெஞ்சினார்கள். ஆனால் இளம்பெண் எதற்கும் செவி சாய்க்கவில்லை. அவர்
'கள்ளக்காதலனுடன் தான் செல்வேன்' என உறுதியாக தெரிவித்தார். கண்ணீருடன் திரும்பி சென்றனர். அப்போது லட்சுமிக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகள் கூறினர். ஆனால், இளம்பெண் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழி இல்லாமல் இளம்பெண்ணை அவருடைய கள்ளக்காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
லட்சுமியின் பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு கண்ணீருடன் திரும்பி சென்றனர். தாய் தங்களை கைவிட்டது கூட தெரியாமல் பாட்டியுடன் சென்ற குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications