"நரபலி" முயற்சி.. 2 வயது குழந்தை நள்ளிரவில் பூஜை.. கடைசி நொடியில் காப்பாற்றிய நாகர்கோவில் போலீஸ்
நாகர்கோவில் பகுதியில் நரபலி கொடுக்க குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையைக் கடத்தி, மந்திரவாதி ஒருவர் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் எடுத்த துரித நடவடிக்கையில் கடைசி நிமிடத்தில் குழந்தை மீட்கப்பட்டது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. வெளியே சொல்ல மாட்டார்கள், எளிதாக எதையும் செய்துவிடலாம் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கிறது.
இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சிறார்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெரிவிக்க 1098 என்ற இலவச உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நரபலி
இந்தியாவில் பிளாக் மெஜிக் எனப்படும் மந்திரவாதிகள் உள்ளனர். இவர்கள் மாந்திரீகம் செய்வதாகச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகப் புகார்களும் உள்ளன. அதிலும் சில மந்திரவாதிகள் நரபலி கொடுக்கும் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். அப்பாவி மக்களும் இந்த மந்திரவாதிகள் சொல்வதை உண்மை என்று நம்பி நரபலிக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதனால் அப்பாவி மக்களின் உயிர்களும் போகக் காரணமாக உள்ளது.

கேரளா
அதிலும் குறிப்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தர்மபுரியைச் சேர்ந்த பத்மா உள்ளிட்ட சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது விஸ்வரூபம் எடுத்தது.. இது தொடர்பாக முகமது ஷபியும், பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கேரள போலீஸ் கைது செய்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில்
இதற்கிடையே தமிழ்நாட்டில் சிலர் அதேபோல நரபலி தர முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - அகிலா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் சஸ்விகா என்ற குழந்தை உள்ளது. சஸ்விகாவை அவர்கள் அங்குள்ள மணலி என்ற பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு நேற்று மாலை அழைத்துச் சென்றுள்ளனர்.. தாத்தா வீட்டில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை திடீரென மாயமானது.

மாயம்
இதனால் பதறிய பெற்றோர் முதலில் அக்கம்பக்கத்தில் குழந்தையைத் தேடினர். இருப்பினும், அங்கு எங்கும் இல்லாத நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அருகே கிணறு இருந்த நிலையில், அதில் தவறி விழுந்து இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

தேடுதல் வேட்டை
அக்கம் பக்கம் முழுக்க போலீசார் வலைவீசி தேடினர்.. இதற்கிடையே இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள காரகொண்டான்விளை தென்னந்தோப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

கடைசி நிமிடத்தில் மீட்பு
அங்கு முதியவர் ஒருவர் குழந்தையை வைத்து பூஜை செய்து கொண்டிருந்துள்ளார். அங்கு குழந்தை அழுது கதறிக் கொண்டிருந்த நிலையில், அதைத் துளியும் கண்டுகொள்ளாமல் அந்த முதியவர் பூஜை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் வீட்டில் புகுந்து குழந்தையை மீட்டனர். அந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்த நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பரபரப்பு
குழந்தையைக் கடத்திய அந்த நபர் 68 வயதான ராசப்பன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் அங்கு மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த முதியவர் குழந்தை சஸ்விகாவை கடத்தி சென்று நகைகளைப் பறிக்கவும் நரபலி கொடுக்கவும் திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ந்து போய்விட்டனர். அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications