காங்கிரஸ் - பாஜக இடையே கொடி கம்புகள், கற்களால் கடும் தாக்குதல்.. நாகர்கோவிலின் களநிலவரம் என்ன?
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தடி, கற்களால் தாக்கி கொண்ட சம்பவத்தில் 4 பேர் காயம், பாஜக மாவட்டத் தலைவர் கைது உள்ளிட்ட அடுத்தடுத்த விஷயங்களால் அந்த பகுதியில் லேசான பதற்றம் நீடிக்கிறது.
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வயநாடு எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ராகுலின் எம்பி பதவியையும் பறித்து மக்களவைச் செயலகம் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே ராகுலின் தகுதிநீக்கத்தை நீக்கம் செய்ய சட்ட ரீதியாகவும் காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள்.

அவசரம்
ராகுலை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், மொட்டை அடித்து போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை 4.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் காங்கிரஸ் கட்சி கொடிகளை கையில் ஏந்தியபடி பேரணி சென்றனர். அப்போது செட்டிகுளம் செல்லும் சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் நோக்கி சென்றனர். அங்கு திரண்டு மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள்
காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் சிலர் பாஜக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை அறிந்தவுடன் அவர்கள் உடனே கூட்டத்தை கைவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள்
உடனே காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பாஜக தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர், "போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்" என தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகளோ முடியாது, கலைந்து செல்ல முடியாது என கூறியதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பும் மாறி மாறி ஒருமையில் திட்டிக் கொண்டனர்.

கைகலப்பு
சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த தடியால் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவினரை தாக்கியதாகவும் பதிலுக்கு அவர்களிடம் இருந்த தடிகளை பிடுங்கி காங்கிரஸார் மீது பாஜகவினர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

பாஜக அலுவலகம்
இந்த சம்பவங்களுக்கு மத்தியில் பாஜக அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினர், அருகே நின்றிருந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்களையும் கல்வீசி தாக்கினர். இது பாஜகவினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்களும் காங்கிரஸ்காரர்கள் மீது கற்களை வீசினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையே போர்க்களம் பூண்டது போல் காட்சியளித்தது.

கம்புகள், கற்கள்
சாலை நெடுக கட்சி கொடிகளும், கம்புகளும், கற்களும், செருப்புகளும் சிதறியிருந்தது. இந்த மோதலில் பா.ஜனதாவை சேர்ந்த கிருஷ்ணன், ஜெகநாதன் ஆகிய 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைசன், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் இவர்களுடைய மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. உடனே பிரதமர் மோடியை அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல் செய்தனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் காங்கிரஸாரை கைது செய்யும் வரை தொடர்ந்து மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்ததால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இந்த மறியலில் பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். போராட்டம் நீடித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சாலை மறியல் போராட்டம்
இதனால் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவினர் தங்களை தாக்கியதாக புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பாஜக தலைவர் தர்மராஜ், கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் லேசான பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications