தைபூசத்தையொட்டி சரிந்த முட்டை விலை.. மீண்டும் உயருகிறது.. கறிக்கோழி விலையில் அதிரடி மாற்றம்
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டு ஏற்றுமதி இருமடங்காக உயர்வு போன்ற காரணங்களால் முட்டை கொள்முதல் விலை அதிகபட்சமாக 640 காசுகள் வரை சென்ற நிலையில், தற்போது சரிய தொடங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் காரணமாக கொள்முதல் விலை சரிய தொடங்கியது. நேற்று முட்டையின் கொள்முதல் விலை 515 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரம் நேற்று முன்தினத்தைவிட நேற்று 5 காசுகள் அதிகரித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. நாமக்கல் மண்டத்தில் இருந்து மட்டும் தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோல் கணிசமான அளவு முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இதற்கான விலையை நாமக்கல்லில் உள்ள தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்கிறது. பண்டிகை கால தேவை, தட்பவெப்பநிலை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு விலை மாற்றம் நடக்கிறது.
அந்த வகையில் சீதோஷ்ண நிலை காரணமாக நாமக்கல் மண்டலத்தில் கடந்த நவம்பர் தொடக்கம் முதலே முட்டை கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி 595 காசுகள் என்கிற வரலாறு காணாத உயர்வை எட்டியிருந்தது.
கடந்த ஜனவரி 16-ந் தேதி கூட்டத்தில் மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக 600 காசுகளை தொட்டது. இதற்கிடையே 18-ந் தேதி 5 காசுகளும், 19-ந் தேதி மேலும் 5 காசுகளும் உயர்த்த பண்ணையாளர்கள் முடிவு செய்தார்கள். இதனால் ஒருரு கட்டத்தில் முட்டை கொள்முதல் விலை முதல் முறையாக 610 காசுகள் என்கிற புதிய உச்சத்தை தொட்டது. இந்த விலை 19 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி நீடித்தது. பின்னர் மீண்டும் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கடந்த மாதம் 23-ந் தேதி 640 காசுகள் என்கிற புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த ஆண்டில், தீவன மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் முட்டை கொள்முதல் விலை உயர்ந்தது. அதேபோல் முட்டை ஏற்றுமதி இருமடங்காக உயர்ந்ததும் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் வடமாநிலங்களில் நிலவிய கடும் குளிரும் முட்டையின் தேவையை அதிகரித்தது. மேலும் தமிழகம் முழுவதும் நிலவிய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்க முட்டைகளின் தேவை அதிகரிப்பு போன்றவையும் முட்டை விலை உயர காரணமாக இருந்தன.
ஆனால் ஜனவரி முதலே முட்டை கொள்முதல் விலை சரிய தொடங்கியது. இதற்கு பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் காரணமாக தமிழகத்தில் முட்டை வாங்குவது குறைந்தது. இதனால் சடசடவென சரிந்து கடந்த இரண்டு நாள் முன்பு முட்டையின் கொள்முதல் விலை 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது ..நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 நாட்களாக தலா 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இதன்படி 510 காசுகளில் இருந்து 515 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை பண்ணை கொள்முதல் விலையில் 15 காசுகள் உயர்ந்துள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சனிக்கிழமை நிலவரப்படி கறிக்கோழி விலை 8 குறைந்தது, கிலோ ரூ.133 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications