காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.. மேட்டூர் அணை வேகமா நிரம்புது.. வெள்ள அபாயம்! அலர்ட் மக்களே!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனையடுத்து, அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 71 வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரையோரப் பகுதிகளான ஜனதா நகர், மீனவர் தெரு, நாட்டான் கவுண்டன் புதூர், அக்ரஹாரம் உள்ளிட்ட காவிரி கரையோர இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications