திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 3 அதிமுக ஒன்றிய பெருந்தலைவர்கள் திமுகவில் இணைந்து முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்துள்ளனர்.
நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம், ஆகிய மூன்று ஒன்றியங்களும் கை நழுவிப் போய்விட்டதால் உள்ளூர் அதிமுகவினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளில் உள்ள இன்னும் பல முக்கிய அதிமுக பிரமுகர்களை திமுகவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளில் ராஜேஷ்குமார் எம்.பி. ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம்
ஒன்றியப் பெருந்தலைவர் என்ற பதவி ஏறத்தாழ ஒரு வட்டாட்சியருக்கு சமமானதாக பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றியச் சேர்மன் பதவியிடங்களை அநாவசியமாக திமுகவிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறது நாமக்கல் மாவட்ட அதிமுக. முன்னாள் எம்.எல்.ஏ.பாஸ்கரும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய விதமும் பிடிக்காமல் நாமக்கல் ஒன்றிய அதிமுக சேர்மன் சுமதி திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.முன்னிலையில் கடந்த 15-ம் தேதி திமுகவில் இணைந்தார்.

அருந்ததியினர்
அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்த சுமதிக்கு, அவர் வகித்து வரும் நாமக்கல் ஒன்றியச் சேர்மன் என்ற பதவிக்காக கூட மரியாதை கொடுக்காமல் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆதரவாளர்கள் தரக்குறைவாக நடத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் வாலண்டியராக திமுகவில் ஐக்கியமானதாகவும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. ஒரு ஒன்றியச் சேர்மன் திமுகவில் இணைந்த போதே அது குறித்து கவனத்தில் கொண்டு அலர்ட் ஆகி தடுத்திருக்க வேண்டிய முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி கோட்டைவிட்டதால் அடுத்தடுத்து 2 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள் திமுகவில் இணைந்துவிட்டனர்.

சொந்த மாவட்டத்தில்
மோகனூர், புதுச்சத்திரம் ஆகிய இரண்டு ஒன்றியப் பெருந்தலைவர்களான சரஸ்வதியும், சாந்தியும், நேற்று திமுகவில் இணைந்த தகவல் அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவில் மிகப்பெரும் ஆளுமையாக திகழும் தங்கமணியின் சொந்த மாவட்டத்திலேயே இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதை இ.பி.எஸ். துளியும் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது. சேலத்தின் அருகாமை மாவட்டம் நாமக்கல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முனைப்பு
இதனால் இப்போது நாமக்கல்லில் முகாமிட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அழைத்து மனம் குளிர பேசி சமாதானம் செய்யும் முயற்சியில் தங்கமணி இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் உள்ள இன்னும் பல முக்கிய அதிமுக பிரமுகர்களை வளைக்க திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் தரப்பு முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications