ஸ்டாலின் பச்சைக்கொடி..? 15 மாசத்துலேயே அமைச்சர் வீட்டு கல்யாணம் இப்படி.. பகீர் கிளப்பிய தங்கமணி!
நாமக்கல் : திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 15 மாதங்களிலேயே 100 கோடி ரூபாய் வரை செலவு செய்து அமைச்சர் ஒருவர் பிரம்மாண்டமாக தனது மகன் திருமணத்தை நடத்தியுள்ளார். முதல்வரே தலைமை ஏற்று இந்த திருமணத்தை நடத்தி வைத்திருப்பது கொள்ளையடிக்க முதல்வர் முக.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக பங்கேற்று அண்ணா உருவப் படத்திற்கு தீபாராதனை காட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அண்ணா பிறந்தநாளை கொண்டாடினர்.

முதல்வர் பச்சைக்கொடி காட்டுகிறாரா?
இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய தங்கமணி, "திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்று 15 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மதுரையில் திமுக அமைச்சர் தனது மகனின் திருமணத்தை 1000 ஆடுகள், 1000 கிலோ கோழி கறி என 100 கோடி ரூபாய் வரை செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இதற்கு முதல்வரே தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருப்பது கொள்ளையடிக்க முதல்வர் முக.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளது.

ஏன் ஓட்டு போட்டோம்
தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் அரசின் மின் கட்டண உயர்வால் நலிவடைந்த தொழில்கள் அனைத்தும் மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பேருந்து கட்டணத்தையும் திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதால் திமுகவிற்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சைக்கிளையும் நிறுத்திடுவாங்க
இலவச பேருந்து என்று சொல்லிவிட்டு பாதி பேருந்தை நிறுத்தி விட்டார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிடும்.இதுதான் திமுக அரசின் சாதனை.

ஆட்சியில் இல்லாவிட்டாலும்
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து வருவது அதிமுக. அதிமுக ஆட்சியில் அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் மின் வெட்டு இல்லை. மின் கட்டண உயர்வும் இல்லாமல் ஆட்சி செய்தார். மக்கள் நிம்மதியாக இருந்தனர். திமுக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்துதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்திரவின்படி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications