கட்சியில் கேட்ட பதவி தரவில்லை! அதிமுகவில் இணையும் திமுக நகர்மன்றத் தலைவர்! தடுக்கும் மதுரா செந்தில்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திமுக நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், அதிமுகவில் இணையவுள்ள தகவல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் கேட்ட பதவி கிடைக்கவில்லை என்பதும் சும்மா பெயருக்கு சுற்றுச்சூழல் அணியில் கொடுத்த பதவி தனக்கு தேவையில்லை என்பதும் திமுக நகர்மன்றத் தலைவர் விஜய் கண்ணனின் அதிருப்திக்கு காரணமாகும். இதனிடையே இவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் இறங்கியிருக்கிறார்.

நாமக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக உள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ்குமாரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக மதுரா செந்தில்குமாரும் உள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட குமாரபாளையத்தில் தான் பஞ்சாயத்து நடந்து வருகிறது.
குமாரபாளையம் திமுக நகர்மன்றத் தலைவராக உள்ள விஜய் கண்ணன் கட்சியில் தனக்கு குமாரபாளையம் நகரச் செயலாளர் பதவி அல்லது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். அவர் எதிர்நோக்கிய இரண்டு பதவிகளும் கிடைக்கவில்லை. இதனால் இனியும் திமுகவிலிருந்து என்ன பயன் என்ற அதிருப்தியில் இருந்து வந்திருக்கிறார்.

இதனிடையே அதிமுக மூத்த தலைவரும், மாஜி அமைச்சருமான தங்கமணி, திமுக சேர்மன் விஜய் கண்ணனை அழைத்துப் பேசி அதிமுகவிற்கு வந்தால் உரிய அங்கீகாரம் தரப்படும் என உறுதியளித்திருக்கிறார். இதனால் திமுகவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அதிமுகவில் இணைவதற்கான முடிவை எடுத்துவிட்டார் விஜய் கண்ணன்.
ஆளுங்கட்சியின் நகராட்சி சேர்மன் அதிமுகவில் இணையவிருப்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் கண்ணனை சமாதானம் செய்யும் முயற்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications