நாமக்கல் மண்ணில் "தோன்றிய" குழந்தை.. மகாளய அமாவாசையில் வேப்பமரத்தடியில் தொப்புள் கொடியுடன்.. அதுவா?
சென்னை: கல்வி, பொருளாதாரம், தொழில் நுட்பம், விஞ்ஞானம் என இந்தியாவின் வளர்ச்சி அடுத்தடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மற்றொருபக்கம் நரபலி, சூனியம் போன்றவைகளில் சிலர் இன்னமும் மூழ்கிபோய் உள்ளனர். வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக விரக்தி, சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை போன்ற காரணங்களால், மூடநம்பிக்கையின் பிடியில் சிலர் சிக்கிவிட நேரிடுகிறது. இதனால் ஏற்படும் பயங்கரங்களை யாராலும் கற்பனை செய்தும் பார்க்க முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், கோவை, நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவதின் யூகங்களும், கணிப்புகளும் மக்களுக்கு மேலும் பீதியை கிளப்பிவிட்டுள்ளன.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் மூட நம்பிக்கைகள் இன்னும் முடிவு பெறாமல் உள்ளபோது, இந்தியாவிலும் அது தொடர்ந்து கொண்டுதான் இருப்பது வேதனையான விஷயம்.

கடந்த 2014 ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, நம்முடைய நாட்டில் 100 நரபலிகள் நடந்துள்ளன.. அதிலும், சூனியத்திற்காக 397 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கேரளா குக்கரில் வெந்த மனித உடல்
கடந்த வரும் கேரளாவில் நரபலி சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது.. விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட பகவல்சிங் - லைலா சிங் தம்பதியினர், மந்திரவாதி ஷபிக்குடன் சேர்ந்து 2 பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி தந்து, அதனை குக்கரில் வேகவைத்து சமைத்து சாப்பிட்ட சம்பவம் அரங்கேறி, மக்களை வெலவெலக்க செய்துவிட்டது.
அதிலும், இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம் மிக்க மாநிலமாக திகழும் கேரளாவில் இப்படியொரு நரபலி நடந்ததை யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை
இப்போது தமிழ்நாட்டிலும் நரபலி துவங்கிவிட்டதோ? என்று அச்சப்படக்கூடிய அளவுக்கு சந்தேக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன..
கோவை தண்டவாளம் - மஞ்சள், குங்குமம்
கடந்த வாரம், கோவை மாவட்டம், இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே கிடந்த தண்டவாளத்தில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்துள்ளது.. உடனே போத்தனூர் ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் கிடந்த ஒன்றரை வயதான ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போதுதான், அந்த குழந்தையின் உடலின் அருகே மஞ்சள், குங்குமம், ரத்தம், வெட்டப்பட்ட கோழியின் உடல் போன்றவை கிடந்துள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.. குழந்தை நரபலி தரப்பட்டிருப்பதாகவும் கோவை மாவட்டம் முழுவதும் தகவல் பரவியது.. ஒன்றரை வயது குழந்தை தண்டவாளத்தில் உயிரிழந்தது கிடப்பது எப்படி? என்பது குறித்த விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல் தொப்புள் கொடி குழந்தை
இந்த பரபரப்பு சம்பவத்தின் உண்மைத்தன்மை தெரிவதற்குள், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. பேளுக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள க.வெள்ளாளப்பட்டியில், வீடு கட்டும் பணிக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் கட்டுமானப் பணிக்காக வந்திருக்கிறார்கள்.. அப்போது அங்கிருந்த வேப்பமரத்து அடியில் கொட்டப்பட்டிருந்த மணலை அள்ள முற்பட்டுள்ளனர்.. அப்போது மண்ணுக்கடியில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்..
உடனே இதுகுறித்து பேளுகுறிச்சி போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து, குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதியிலுள்ள கோவில் ஒன்றின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.. அதில் 2 பேர், நள்ளிரவு 2 மணிக்கு அந்த பகுதிக்குள் நுழைந்ததும் பதிவாகியிருக்கிறது.. ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை. அதுகுறித்த விசாரணையும் நடந்துவருகிறது.
வேப்பமரத்து அடியில் மண்ணில் தென்பட்ட குழந்தை
நேற்று மகாளய அமாவாசை என்பதால், குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? அல்லது கரு கலைப்பு செய்து மண்ணில் புகைக்கப்பட்டதா? என்ற குழப்பமும், அச்சமும் அந்த பகுதி மக்களிடம் நிலவி வருகிறது..
தொப்புள் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில், பிறந்த ஆண் குழந்தையை மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை நாமக்கல்லில் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications