நாமக்கல் விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்.. டிராக்டருக்கு 50% மானியம்.. விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை விவசாயிகளுக்கு மானியம் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. கார்கூடல்பட்டி பிட்-1 விவசாயிகளுக்கு புதிய டிராக்டர் வாங்க 50% வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. 20 முதல் 40 HP வரையிலான டிராக்டருக்கு இந்த மானியம் கிடைக்கும், உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம், தகுதியானவர்களில் ஆன்லைன் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார் என்றெல்லாம் தகவல் வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் இங்கே பார்ப்போம்..!!
தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் திட்டங்களில் 50 சதவீதம் வரை மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் விதைகள், வேளாண் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் பெற முடிவதால் விவசாயிகளின் உற்பத்திச் செலவு குறைந்து, வருமானம் அதிகரிக்க உதவும்.

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்
இதனை உழவன் செயலியில் விண்ணப்பித்து பெறலாம்.. தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் செயலி இதுவாகும்.. விவசாயிகள் அரசு வேளாண் மானியத் திட்டங்கள், பயிர் மற்றும் வானிலை தகவல்கள், சந்தை விலை உள்ளிட்ட பல்வேறு விவசாய சேவைகள் மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளவும், தகுதியுள்ள திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் பயன்படுத்தக்கூடியது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கார்கூடல்பட்டி பிட்-1 கிராமத்தைச் சேர்ந்த தகுதியான விவசாயிகளுக்கு புதிய டிராக்டர் வாங்க அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உழவன் செயலி
அந்த அறிவிப்பில், "விவசாயிகளின் சாகுபடி பணிகளை எளிதாக்கவும், வேளாண் எந்திரமயமாக்கலை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட கார்கூடல்பட்டி பிட்-1 கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, அரசு மானிய விலையில் டிராக்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 20 முதல், 40 ஹெச்.பி., புதிய டிராக்டர் வாங்க விவசாயிகளுக்கு அரசு சார்பில் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக, 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கார்கூடல்பட்டி பிட்--1 கிராம பகுதி விவசாயிகள் தங்களது மொபைல் போனில், 'உழவர் செயலி' வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல் மாவட்டம்
உழவன் செயலியில் சென்று வேளாண்மை பொறியியல் இயந்திரங்கள் வாடகைக்கு என்ற பிரிவில் உள்ள மானியங்கள் என்ற பதிவின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள விவசாயிகள், வரும் செப்., 7- வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளில் இருந்து ஒருவர் மட்டும், வரும் செப்., 8ல் கணினி மூலம் வெளிப்படையான ஆன்லைன் குலுக்கல் முறையில் பயனாளியாக தேர்வு செய்யப்படுவார். எனவே, இக்கிராமத்தில் உள்ள தகுதியுடைய விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த அதிரடி அறிவிப்பானது, மாவட்ட விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
