நாமக்கல்லில் பயங்கரம்.. மகளின் கள்ளக்காதலுக்காக இடையூறான மருமகன்.. போட்டுத் தள்ளிய மாமியார்
நாமக்கல்: மகளின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மருமகனை மாமியாரே கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ளக்காதல் விவகாரத்தால் நிகழும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் எந்த மாநிலமும் விதிவிலக்கு இல்லை என கூறும் அளவுக்கு, அனைத்து மாநிலங்களிலும் கள்ளக்காதல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.
கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன் கொலை, கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொலை செய்த மனைவி போன்ற செய்திகள், தினமும் நம் கண்ணில் தென்பட்டுவிடும் அளவுக்கு கலாச்சாரம் சீர்கெட்டு போயுள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஒழுக்கம் தவறினால் வாழ்க்கையே பறிபோகும் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள்தான் உதாரணம். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது. ஆனால் சற்று வித்தியாசமாக, மகளின் கள்ளக்காதலுக்கு தாயே இந்த கொலை பாதக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.

கணவன் - மனைவி தகராறு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணத்தூர், சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி (30). டெம்போ டிரைவாக இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நித்ரன் (5), அகிலன் (3) என இரு குழந்தைகள் உள்ளனர். முதலில் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் அண்மைக்காலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

மனைவி மீது சந்தேகம்
இதனிடையே, குடும்பப் பிரச்சினையை காரணமாக கூறி மனைவி ஜோதிலட்சுமி அவ்வப்போது தனது தாயாார் ஜானகி வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். முதலில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட கணவர் அருள்மணிக்கு நாட்கள் செல்ல செல்ல, மனைவி ஜோதிலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தெரியவந்த கள்ளக்காதல்
பிறகு, ஜோதிலட்சுமியை அருள்மணி ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார். அப்போது ஜோதிலட்சுமிக்கும், அவரது தாயார் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் மணிகண்டன் (26) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பது அருள்மணிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருள்மணி, மணிகண்டன் உடனான பழக்கத்தை கைவிடுமாறு மனைவி ஜோதிலட்சுமியை பல முறை கண்டித்துள்ளார். ஆனால் ஜோதிலட்சுமி மணிகண்டனுடன் பழகுவதை நிறுத்தவில்லை.

மனைவி, மாமியாரிடம் தகராறு
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படவே, ஜோதிலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். அருள்மணி பல முறை வந்து கூப்பிட்டும், அவருடன் செல்ல ஜோதிலட்சுமி மறுத்துவிட்டார். இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு மாமியார் வீட்டுக்கு சென்ற அருள்மணி, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை தடுக்க வந்த மாமியார் ஜானகியையும் அவர் ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை - கைது
இதன் காரணமாக, மகளின் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் தனது மருமகன் அருள்மணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக மகளின் கள்ளக்காதலனான மணிகண்டன் உடனும் அவர் பேசியுள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த அருள்மணியை, மணிகண்டன், அவரது நண்பன் லோகேஸ்வரன் (23) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் நிகழ்விடத்திலேயே அருள்மணி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் போலீஸார், மணிகண்டன், லோகேஸ்வரன், மாமியார் ஜானகி ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications