மாமியாருக்கு ’பாயசத்த’ போட்ற வேண்டியது தான்..தனலட்சுமிக்கு தமிழ்செல்வியின் ஸ்கெட்ச்! அதென்ன மருந்து?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாரை விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக மருமகள் உள்ளிட்ட மூன்று பேர் சிக்கி இருக்கின்றனர். மக்களை தேடி மருத்துவத் திட்டத்திலிருந்து வருகிறோம் என போலி நர்சை அனுப்பி ஸ்கெட்ச் போட்ட மருமகள் சிக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு மாமியாருக்கு ஆப்படித்த தமிழ்ச்செல்வி தற்போது தாய் உள்ளிட்ட மூன்று பேருடன் சிறையில் கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறார். தனலட்சுமி என்ற பெண் தான் மருமகளின் சதி திட்டத்தில் சிக்கினாலும் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குச்சிபாளையத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. 2 நாட்களுக்கு முன்பு மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் தனது வீட்டுக்கு வந்த நர்ஸ் கொடுத்த ஊக்க மருந்தை குடித்ததாகவும், அதனால் தனக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வந்த பெண் யார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அப்படி யாரையும் தாங்கள் அனுப்பவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து நர்ஸ் எனக் கூறி வந்தவரின் செல்போனை கொண்டு விசாரித்ததில் ராஜகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோமதி என்பவர் சிக்கினார்.
அவரை பிடித்து விசாரித்த போது தான் பின்னர் பெரிய கொலை சதித் திட்டமே இருந்தது தெரியவந்தது. இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் தமிழ்ச்செல்வி. அவர் தனலட்சுமி மருமகள் என்பது தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான செய்தி. தனலட்சுமி மகன் சரவணபெருமாளும் தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தனலட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை எனக்கு கூறப்டுகிறது. இதை அடுத்து வரப்பாளையம் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கு இடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான சரவணபெருமாள் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மகனின் திருமணத்தை பிடிக்காத தனலட்சுமி அதனை பயன்படுத்திக் கொண்டு தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் வேறு திருமணம் செய்து வைக்கிறேன், தனது சொத்தில் பங்கும் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். மாமியார் தங்களை பிரிக்க நினைப்பது குறித்து தனது தாய் பாப்பாத்தி இடம் தெரிவித்திருக்கிறார் தமிழ்ச்செல்வி.
தனலட்சுமி இறந்துவிட்டால் சொத்து தானாகவே தனது கணவருக்கு வந்து விடும் என்பதால் அவரை கொலை செய்ய தாயும் மகளும் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் கொலையை சந்தேகமே இல்லாமல் அரங்கேற்ற வேண்டும் என்பதற்காக தங்களுக்கு தெரிந்த நர்சு கோமதியை திட்டத்தில் சேர்த்துள்ளனர். நர்சிங் படிப்பை பாதியில் விட்ட கோமதி தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வந்திருக்கிறார். பாப்பாத்திக்கும் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கொலை என்பதால் கோமதி லேசாக நடுங்க, சொத்தில் ஒரு பங்கு தருவதாகக் கூறி சம்மதிக்க வைத்து மக்களை தேடி மருத்துவ திட்டம் நர்ஸ் எனக் கூறி தனலட்சுமி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அவரது உடல் நிலையை பரிசோதிப்பது போல் நடித்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதற்காக கோமதியை காரில் அழைத்துச் சென்று இறக்கி விட்டிருக்கிறார் பாப்பாத்தி. தொடர்ந்து தனலட்சுமி வீட்டுக்கு சென்ற அவர் உங்களுக்கு பிரஷர் அதிகம் இருக்கிறது என கூறி அதற்கு ஊக்க மருந்து குடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து ஏற்கனவே விஷம் கலந்து வைத்திருந்த குளிர்பானத்தையும் கொடுத்திருக்கிறார். மருந்து கசக்கிறது என தனலட்சுமி கூற மருந்து என்றாலே கசக்கும் என சமாதானப்படுத்தி குடிக்க வைத்து விட்டு காரில் ஏறி தப்பி இருக்கிறார். இந்த நிலையில் திடீரென அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கோமதியின் செல்போனுக்கு அழைத்துள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் அவர் சரியாகிவிடும் எனக் கூற, தனலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் கொலை திட்டத்திற்காக வந்த கோமதி தனக்கே தெரியாமல் செல்போன் எண்ணை கொடுத்ததும், அந்த செல்போன் எண் மூலமே பாப்பாத்தி, தமிழ்ச்செல்வி, கோமதி ஆகிய மூன்று பேர் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications