இப்படி ஒரு கவுன்சிலரா.. ஸ்டாலின் ஆர்டர்.. வீடு வீடாக தாம்பூலத்துடன் போன "சசிரேகா".. திகைத்த மக்கள்
நாமக்கல்: ராசிபுரத்தில் நகரசபை கூட்டத்திற்கு பெண் கவுன்சிலர் ஒருவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சட்டசபையில் அறிவித்தார்.
கிராம சபை கூட்டங்கள் மூலம் உள்ளூர் பிரச்சனைகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கிராம் சபை கூட்டங்கள் உதவியாக இருக்கின்றன.

கிராம சபை
கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும் நகரசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்தது. நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டாலும், இங்கு கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தன. நகராட்சி அளவில் மக்களுக்கு இருக்கும் குறைகளை கேட்டறிய கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து தமிழ்நாட்டில் நகர மற்றும் மாநகர சபை கூட்டங்களை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நகர சபை
நாளை நவம்பர் 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதோடு சேர்த்து நகர, மாநகர சபை கூட்டங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நகர பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, மின் விளக்கு பிரச்சனை, கழிவு நீர் பிரச்சனை, மழை நீர் கால்வாய் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை இதில் விவாதிக்க முடியும். வார்டு வாரியாக கவுன்சிலர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்படும்.

ஸ்டாலின் உத்தரவு
இவர்கள் சார்பாக ஒரு குழு உருவாக்கப்படும். பொதுமக்களும் இடம்பெறும் அந்த குழு மூலம் குறைகளுக்கு தீர்வுகள் காணப்படும். கவுன்சிலர் தலைமையில் இந்த குழுக்கள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. கவுன்சிலர் தலைமையில் 8-9 உறுப்பினர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு, மக்களின் குறைகள் கேட்டறியப்பட உள்ளன. சென்னை பல்லாவரம் பம்மல் 6வது வார்டில் நாளை நடைபெற உள்ள நகரசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.

சசி ரேகா
இந்த நிலையில் ராசிபுரத்தில் நகரசபை கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலர் ஒருவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து ராசிபுரம் 12வது வார்டு கவுன்சிலர் சசிரேகா இப்படி வெற்றிலை பாக்கு வைத்து மக்களை அழைத்து வருகிறார். தனது வார்டு மக்களை வெற்றிலை பாக்கு வைத்து, தாம்பூலத்தில் குங்குமம் எல்லாம் கொடுத்து சசிரேகா அழைத்து வருகிறார்.

கூட்டம்
தன் ஏரியா மக்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் குறைகளை கேட்க முடியும். அதை நிவர்த்தி செய்ய முடியும் என்று இந்த நூதன முறையை சசிரேகா கையில் எடுத்துள்ளார். அவரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. அப்பகுதி மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர். கவுன்சிலர் இப்படி மக்களிடம் நெருக்கமாக, அன்பாக இருப்பது நல்லது என்று கூறியுள்ளனர். சசிரேகா சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications