90’ஸ் கிட்ஸ் தான் குறி! 6 பேரை கவிழ்த்த ‘கல்யாண ராணி’! இன்னும் 4 குரூப்.. அதிர வைத்த வாக்குமூலம்!
நாமக்கல் : ஒரே பெண்ணை காட்டி திருமணம் செய்து வைத்து பணம், நகையுடன் எஸ்கேப்பான கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை மணமகள்களாக காட்டி 10க்கும் அதிகமான திருமணங்கள் நடத்தி மோசடி செய்ததாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெங்கரை அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் . இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் புரோக்கர் பாலமுருகன் மூலம் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, 2 நாள் குடும்பம் நடத்திய நிலையில், 7ம் தேதி சந்தியா மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனபால், இது குறித்து பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

கல்யாண மோசடி
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய வரன் பார்த்தபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் மற்றும் உறவினர்கள், அந்த நபர் மூலம் பொறி வைத்து கும்பலை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, ஐயப்பன், கவுதம், டிரைவர் ஜெயவேல் ஆகிய 5 பேர் காரில் திருச்செங்கோடு வந்தபோது, அங்கு காத்திருந்த தனபால் மற்றும் உறவினர்கள் அவர்களை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

7வது திருமணம்
விசாரணையில், சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உட்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், 7வது திருமணம் செய்ய வந்தபோது சிக்கியதும் அம்பலமானது. கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இதுபோன்று பெண் தேடுபவர்களை குறி வைத்து திருமணங்கள் செய்து ஏமாற்றி வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல பெண்களை காட்டி 12க்கும் மேற்பட்ட திருமணம் நடத்தி வைத்திருப்பதாகவும் திருமண மோசடி கும்பலைச் சேர்ந்த புரோக்கர் ஐயப்பன் போலீசாரை அதிர வைத்துள்ளார்.

பரபர வாக்குமூலம்
இதனிடையே திருமண பெண்ணாக நடித்த சந்தியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது. தற்போது வரை இந்த மோசடி சம்பவம் தொடர்பாக சந்தியா, தனலட்சுமி, கௌதம் ஜெயவேல் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது கூட்டாளியான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் திருமங்கலத்தைச் சேர்ந்த ரோஷினி திருப்பூரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் ஐயப்பன் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிர்வாண புகைப்படங்கள்
இந்த நிலையில் கல்யாண மோசடி எப்படி நடந்தது குறித்து சந்தியா பகீர் தகவல்களை கூறி இருக்கிறார். அதில்," மதுரையைச் சேர்ந்த புரோக்கிரான பாலமுருகன் தன்னை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்ததாகவும் மோசடி திருமணத்திற்கு சம்மதிக்க விட்டால் அவருடைய நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாலும் தனது குழந்தைகளை கொன்று விடுவேன் என்று கூறியதால் திருமணங்களுக்கு சம்பதிக்காக கூறியுள்ளார். தான் மட்டுமல்லாது இதேபோல நான்கு பெண்கள் இந்த மோசடி கும்பலின் பிடியில் உள்ளதாகவும் மோசடியின் மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதிகளை புரோக்கர்கள் எடுத்துக்கொண்டு சிறிய தொகையை மட்டுமே தங்களுக்குத் தருவார் என கூறியுள்ளார்.

சிக்க வைத்தது எப்படி?
மதுரையில் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளை எடுத்து புரோக்கர்களை அக்கா மாமா தந்தை என நடிப்பார்கள் எனவும் திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நெருங்கி பழகி அவர்களிடம் செல்போன், பட்டுப் புடவை, பணம், நகை உள்ளிட்ட அவற்றை பேசி வாங்குவதோடு திருமணம் முடிந்த இரண்டாவது நாலே நள்ளிரவில் வீடுகளை விட்டு கிளம்பி விட வேண்டும் என கூறி இருக்கின்றனர். சில நேரங்களில் பகலில் மாப்பிள்ளைக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு கூட இருக்கிற பொருட்களை வாரிசுருட்டி கொண்டு இந்த கும்பல் கிளம்பி இருக்கிறது. இதுவரை திருமணம் மோசடியில் சிக்கிய இளைஞர்கள் பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்பதால் போலீஸிடம் செல்லவில்லை எனவும், இதனை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பல பகுதிகளில் திருமண மோசடிகளை அரங்கேற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.