“தம்பி இங்கு அரசியல் பேசாதீங்க” தவெக அருண்ராஜ் பேச்சுக்கு எதிர்ப்பு.. பொங்கல் நிகழ்ச்சியில் பரபரப்பு
நாமக்கல்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளன. தவெக தீவிர திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்து இறங்கியுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு தடை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் சிபிஐ நெருக்கடி ஆகியவற்றால் தவெக வில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அருண்ராஜ் நாமக்கல் அருகே பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அரசியல் பேசி, திமுக மற்றும் அதிமுக வை கடுமையாக விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட ஊர் கமிட்டி தலைவர், "பொங்கல் பத்தி மட்டும் பேசுங்க. இந்த மேடையில் அரசியல் பேசக் கூடாது" என்று அருண்ராஜிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொங்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அருண்ராஜ் கட்சி கரைவேட்டி, துண்டுடன் மேடையில் அரசியல் பேசினார். அப்போது அவரின் பேச்சை குறுக்கிட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

திமுக அதிமுக மீது அருண் ராஜ் விமர்சனம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய அருண்ராஜ், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகவும், நம் வெற்றித் தலைவர் வருங்கால முதலமைச்சர் சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நம் தலைவரை பிடிக்குமா. நடிகராக இருந்ததை விட, அரசியல் கட்சி தலைவரான பிறகு அவருக்கு மக்கள் அமோக ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர்.
50 வருடங்களுக்கு மேலாக 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். மக்களின் வாழ்க்கை தரம் மாறியுள்ளதா. மக்கள் பார்வையில் இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. என்ன காரணம். எங்க பார்த்தாலும் ஊழல். சாலை, குடிநீர் வசதி, கல்வி, மருத்துவமனை, சாக்கடை எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளது. அரசு மருத்துவமனையில் கொடுக்கும் மருந்து தரமாக உள்ளது. அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளனர்.
இது பொதுவான மேடை
நாம் கட்டும் வரிப்பணத்தில் தான் அரசாங்கம் நடக்கிறது. அது முறையாக மக்களுக்கு சென்று சேரவில்லை. நம் தலைவர் எதற்காக கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா. பணம், பெயர், புகழ் எல்லாம் கொடுத்த மக்களுக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளார்" என்றார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, கீழே அமர்ந்திருந்த ஊர் கமிட்டி தலைவர், தவெக நிர்வாகி ஒருவரை அழைத்து, "இங்கு அரசியல் பேச வேண்டாம். இது பொதுவான நிகழ்ச்சி" என்று கூறினார். தவெக நிர்வாகி அருண்ராஜிடம் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஊர் கமிட்டி தலைவரே கீழே இருந்து அவரிடம் நேரடியாக பேசினார்.
அரசியல் பேசாதீங்க
அப்போது ஊர் கமிட்டி தலைவர், "பொங்கல் பத்தி மட்டும் பேசுங்க. வேற எதுவும் இங்க பேசக்கூடாது. இங்க தலைவர் நான் தான். இது பொது நிகழ்ச்சி. வேறு மேடை போட்டு அரசியல் பேசுங்கள். இந்த மேடைக்கு நான் தான் தலைவர். ஓகே" என்று கூறினார். அதற்கு அருண்ராஜ் சிரித்தபடியே "ஓகே சார்" என்று கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications