தனியார் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. வளைவில் விபரீதம்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. காக்காவேரி பகுதி வளைவில் பேருந்து திரும்பியபோது, பேருந்தில் முன்புற படிக்கு அருகில் நின்று கொண்டிருந்த சாரதா என்ற பெண் தூக்கி வீசப்பட்டார்.

தனது மகளின் திருமணத்திற்காக சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு பேருந்தில் செல்லும்போது, வேகமாகச் சென்ற பேருந்து வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக சாரதா கீழே தவறி விழுந்தார்.
உடனே பயணிகள் சத்தம் போட்டதால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓடிச் சென்று கீழே தவறி விழுந்து படுகாயங்களுடன் இருந்த சாரதாவை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சாரதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சாரதா ராசிபுரத்தை அடுத்த ஜேடர் பாளையத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தனியார் பேருந்தில் பயணித்த பெண் சாலையில் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.












Click it and Unblock the Notifications