சீனுக்குள் வரும் சீனா.. ரஷ்யாவுக்கு 'வெப்பன்ஸ்' சப்ளை? அமெரிக்காவின் சிஏஐ கிளப்பிய பகீர்.. என்னவாம்
ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகித்திருந்தது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
நியூயார்க்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்துள்ள போர் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு சீனா ஆயுதங்களை வழங்க பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு ஒப்புதல் தெரிவத்ததிலிருந்து அந்நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி வருகிறது. இது போர் அல்ல சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறினாலும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை போராகவே குறிப்பிடுகின்றன. இந்நிலையில் இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆயினும் போரை நிறுத்துவது தொடர்பாக எவ்வித சமாதான பேச்சுவார்ததைக்கும் ரஷ்யா தயாராக இல்லை.
எனவே போர் இரண்டாவது ஆண்டாக நீடிக்கும் அபாயம் உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில் உக்ரைனை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிந்த ரஷ்யா, அவசரப்பட்டு இறங்கிட்டமோ என்று தற்போது யோசிக்க தொடங்கியுள்ளது. காரணம் அமெரிக்கா செய்து வரும் ஆயுத உதவிதான். போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை ரூ.3 லட்சம் கோடி அளவில் ஆயுத உதவிகளை செய்திருக்கிறது.

அமெரிக்காவின் உதவி
உலகின் மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட நாடு ரஷ்யா. இதுவே தனது ராணுவத்திற்கு ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் கோடிதான் செலவு செய்கிறது. ஆனால் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா செய்துள்ள உதவி இதில் 60% ஆகும். ரஷ்யா தற்போது திணறி வருவதற்கு இதுதான் காரணம். இந்நிலையில், போரில் நிலை தடுமாறி வரும் ரஷ்யாவுக்கு சீனா ஆயுத உதவிகளை செய்ய முன்வந்துள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் இது குறித்து கூறுகையில், "அவர்கள் ஆயுத உதவி செய்வது குறித்து பரிசீலித்து வருகிறார்கள். ஆனால் இது இதற்போது வரை பரிசீலனையில்தான் இருக்கிறது. இன்னும் ஆயுதங்கள் கைமாறவில்லை" என்று கூறியுள்ளார்.

சீனா
ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள்தான் தற்போது ரஷ்யாவுக்கு தேவையாக இருப்பதால் சீனா இதைத்தான் ஏற்றுமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போரில் அணு ஆயுத தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஏற்கெனவே ரஷ்யாவை எச்சரித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எதிர்பார்த்ததைப்போல அமெரிக்க ஆதரவு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க, ஒரு சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவளித்தது. இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை.

இந்தியா
இது அமெரிக்காவுக்கு பெரிய ஏமாற்றமாகும். ஏனெனில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவை விட நம்பகமான நாடு வேறு இல்லையென்பதால் தொடர்ந்து இந்தியாவுடனான உறவை அமெரிக்கா சிறப்பாக பராமரித்து வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவை உள்ளடக்கி குவாட் அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இவ்வளவு செய்தும் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்காதது அமெரிக்காவுக்கு ஏமாற்றம்தான். இந்த சலசலப்புகளுக்கு இடையில்தான் தற்போது சீனா குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடி
ரஷ்யா இந்த போரிலிருந்து விலகவில்லையெனில் விரைவில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கெனவே பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இக்கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications