விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. கூகுளில் 39 முறை இன்டர்வியூ போன நபர்.. கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்
நியூயார்க்: தனக்கு பிடித்த வேலைக்காக சுமார் 39 முறை முயற்சித்து பின்னர் வேலை பெற்ற அனுபவத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வேலை தேடும் இளைஞர்கள் மட்டுமல்லாது சமூக வலைத்தள பயனாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
டைலர் கோஹன், அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். இவர் டோர்டாஷ் எனும் நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

கனவு
இந்நிலையில் அவருக்கு இந்த பணியிலிருந்து தனக்கு பிடித்த பணிக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் கனவு. எனவே கடந்த 2019 ஆகஸ்ட் 25தேதி விண்ணப்பித்தார். ஆனால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் விண்ணப்பித்துள்ளார். அப்போதும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்படியாக தொடர்ந்து 39 முறை முயன்று பின்னர் 40வது முறையாக அவரது விண்ணப்பம் ஜூலை 19, 2022 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஸ்கிரீன்ஷாட்
இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பகிர்ந்துள்ளார். அவரது தொடர் முயற்சியை பாராட்டி நேர்மறையான விமர்சனங்கள் பின்னூட்டங்களாக பயனாளர்கள் பலர் இணைத்துள்ளனர். உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5.7 சதவிகிதமாக இந்த வேலையின்மை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவில் மட்டும் இந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.6 ஆக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2020 பிப்ரவரியில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் தற்போது வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகரித்துள்ளது. வேகமாக முன்னேறி வரும் நாடு, உலக வல்லரசு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வசாதாரணம் என அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.

நெகிழ்ச்சி
எது எப்படி இருந்தாலும் நமக்கு பிடித்த வேலையை செய்வதில் உள்ள மன திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றே உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் டைலர் கோஹன் தனக்கு பிடித்த வேலைக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அவரது பணி விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதைப்போல் உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவரை போல மற்றவர்களும் தங்கள் கனவை விடாமல் தொடர வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications