ஈரான் - இஸ்ரேல் போரில்.. அதிகாரபூர்வமாக நுழைந்த அமெரிக்கா! தொடங்கிய உலகப்போர்? இனி என்ன நடக்கும்?
சென்னை: ஈரான்- இஸ்ரேல் போருக்குள் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நுழைந்து உள்ளது. அமெரிக்கா இதில் நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதால்.. அடுத்த கட்டமாக ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், ஈரான் ஆதரவு நாடுகள் போரில் தலையிட வாய்ப்புகள் உள்ளன.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
உலகப்போர் உருவாகும் அபாயம்
டிரம்ப் செய்த இந்த செயல் இந்த போரை பெரிதாக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது குண்டு போட்டு உள்ளதால்.. ஈரான் பதிலடி தரும் வாய்ப்புகள் உள்ளன. இது நேட்டோவின் போராக மாறும். ஏனென்றால் அமெரிக்கா குண்டு போட்டால் அதற்கு ஈரான் பதிலடி தரும். இதனால் நிலைமை மோசமாகி நேட்டோ போரில் தலையிடும். இதற்கு பதிலடி ரஷ்யா கண்டிப்பாக போரில் குதிக்கும். ஈரான், ரஷ்யாவிற்கு துணையாக பல இஸ்லாமிய நாடுகள் களமிறங்கும். ஏன் சீனாவும் கூட களமிறங்கி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. டிரம்ப் செய்த இந்த தவறு.. 3ம் உலகப்போருக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேலை பொதுவாக ஆதரிக்கும் நாடுகள், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நடுநிலையான நாடுகள் பற்றி இங்கு காணலாம். இந்த நாடுகள் போரில் குதிக்கும் பட்சத்தில் அது 3ம் உலகப்போராக கண்டிப்பாக மாறும்.
இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள்
இஸ்ரேலை அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ அல்லது ராஜதந்திர ரீதியாகவோ ஆதரிக்கும் நாடுகள் பல உள்ளன.
அமெரிக்கா - இஸ்ரேலின் மிக முக்கியமான நட்பு நாடு. இராணுவ மற்றும் உளவுத்துறை ஆதரவை வழங்குகிறது.
ஐக்கிய ராஜ்ஜியம்- இஸ்ரேலுக்கு அரசியல் ஆதரவு அளிக்கிறது. பெரும்பாலும் அமெரிக்காவின் கொள்கைகளை ஒட்டியே செயல்படுகிறது.
ஜெர்மனி - யூத இனப்படுகொலைக்குப் பின்னர் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை அளித்து வருகிறது.
பிரான்ஸ் - இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் சில கொள்கைகளை விமர்சிக்கிறது.
கனடா - இஸ்ரேலுக்கு ராஜதந்திர மற்றும் அரசியல் ஆதரவை வழங்குகிறது.
ஆஸ்திரேலியா - பொதுவாக இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவை வழங்குகிறது.
இந்தியா - வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பகிர்வு ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆதரவை அளிக்கிறது. ஆனால் ராணுவ, போர் விவகாரங்களில் ஆதரவு இல்லை.
ஜப்பான் - அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கிறது. ஆனால் இஸ்ரேல்-மேற்கு நாடுகளின் கூட்டணியை நோக்கி சாய்கிறது.
தென் கொரியா - ஜப்பானைப் போன்றே நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது.
ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து - ஐரோப்பிய ஒன்றியத்தில் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு குரல் கொடுக்கின்றன.
அர்ஜென்டினா & பிரேசில் (சில அரசாங்கங்களின் கீழ்) - இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகள்
ஈரானை அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ அல்லது சித்தாந்த ரீதியாகவோ ஆதரிக்கும் நாடுகள் சில உள்ளன.
ரஷ்யா - ஈரானின் மூலோபாய நட்பு நாடு. குறிப்பாக இராணுவ ரீதியாகவும், சிரியாவிலும் ஆதரவு அளிக்கிறது.
சீனா - ஈரானின் வலுவான பொருளாதார பங்குதாரர். உலகளாவிய மன்றங்களில் ஈரானுக்கு ஆதரவளிக்கிறது.
சிரியா - ஈரானின் நெருங்கிய இராணுவ நட்பு நாடு. ஈரானிய துருப்புக்கள் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு அடைக்கலம் தருகிறது.
ஈராக் - சில பிரிவுகள் (குறிப்பாக ஷியா போராளிகள்) ஈரானுக்கு வலுவான ஆதரவு அளிக்கின்றன.
லெபனான் - ஹிஸ்புல்லா (வலுவான அரசியல் / இராணுவ சக்தி) ஈரானால் ஆதரிக்கப்படுகிறது.
ஏமன் (ஹவுத்திகள்) - ஈரானால் ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் சவுதி நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிறது.
வட கொரியா - ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துள்ளது. அமெரிக்க எதிர்ப்பு நட்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
வெனிசுலா - அமெரிக்க எதிர்ப்பு, ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
இந்தியா - வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பகிர்வு ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆதரவை அளிக்கிறது. ஆனால் ராணுவ, போர் விவகாரங்களில் ஆதரவு இல்லை.
நடுநிலை அல்லது சமநிலையான நிலைப்பாட்டைக் கொண்ட நாடுகள்
பதற்றத்தை தணிக்க அழைப்பு விடுக்கின்றன அல்லது எந்தவொரு தெளிவான பக்கத்தையும் எடுக்காத நாடுகள்.
துருக்கி - இஸ்ரேலை பகிரங்கமாக விமர்சிக்கிறது. ஆனால் வர்த்தக உறவுகளைப் பேணுகிறது. ஈரானுடனான உறவுகளும் சிக்கலானவையாக உள்ளது.
கத்தார் - பாலஸ்தீனிய நாடு உருவாகஆதரவளிக்கிறது. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்கிறது. இஸ்ரேலை நேரடியாக எதிர்க்கவில்லை.
சவுதி அரேபியா - ஈரானை எதிர்த்த இந்த நாடு இப்போது நட்பாகி வருகிறது. ஆனால் இஸ்ரேலுடனான வெளிப்படையான உறவுகளை மேற்கொள்ளவில்லை.
UAE, பஹ்ரைன், மொராக்கோ - இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்கியுள்ளன (ஆபிரகாம் உடன்படிக்கைகள்). அதேசமயம் பிராந்திய அமைதிக்கும் அழைப்பு விடுக்கின்றன.
எகிப்து, ஜோர்டான் - இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை கொண்டுள்ளன. அதே சமயம் பாலஸ்தீனிய உரிமைகளுக்கும் ஆதரவு அளிக்கின்றன.
பாகிஸ்தான் - இஸ்ரேலுடன் எந்த உறவும் இல்லை. அதே சமயம் ஈரானுடன் ஆழ்ந்த கூட்டணியையும் விரும்பவில்லை.
இந்தோனேசியா - இஸ்ரேலுடன் எந்த உறவும் இல்லை. பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறது. ஆனால் ஈரானுடன் முழுமையாக நட்பாகவும் இல்லை.
இந்த நாடுகள் ஒவ்வொன்றும் பிராந்திய மற்றும் உலக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.












Click it and Unblock the Notifications