காசாவில் சிதறும் உடல்கள்.. முற்றுப்புள்ளிக்கு ரஷ்யா எடுத்த முயற்சி! முட்டுக்கட்டை போட்ட மேற்கு
நியூயார்க்: காசாவில் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்: இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

கண்டனம்: மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, அவர்கள் போக்கு காட்டி வருகின்றனர். ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
பிணை கைதிகள்: மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு: தற்போது வரை காசாவில் 450க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 10,900க்கும் அதிகமானோர் பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்கவைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரைவு தீர்மானம்: காசாவில் 23 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், எரிபொருள் என அனைத்தையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது. இந்த மக்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு ஒரு லிட்டருக்கும் குறைவான அளவுதான் குடிநீர் கிடைக்கிறது. இப்படி இருக்கையில், உடனடியாக மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, போர் நிறுத்த வரைவு தீர்மானத்தை கொண்டு வந்தது.
ஆதரவும் எதிர்ப்பும்: இதன்படி இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை உதவிகள் வழங்கப்பட வேண்டும், அதேபோல மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சீனா, காபோன், மொசாம்பிக், ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் வாக்களித்தன. ஆனால் இதை எதிர்த்து அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வாக்களித்தன.
தோல்வி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன. அதேபோல அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், காபோன், கானா, ஜப்பான், மால்டா, மொசாம்பிக், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என 10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக இருக்கின்றன. இப்படி இருக்கையில் இங்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் அதற்கு குறைந்தது 9 நாடுகளின் ஆதரவு அவசியம். எந்த நிரந்தர நாடும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அதேபோல முக்கியமாக வீட்டோ பவர் பயன்படுத்தப்படக்கூடாது.
முட்டுக்கட்டை: இப்படி இருக்கையில் ரஷ்யாவின் தீர்மானம் இந்த முறை தோல்வியடைந்துள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதியான வசிலி நெபென்சியா, "இந்த சபை நாங்கள் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்க தவறியது வருத்தமளிக்கிறது. அதேபோல இது மேற்கத்திய நாடுகளின் சுயநலத்தையும் பிரதிபலிக்கிறது. மத்திய கிழக்கில் நிகழும் வன்முறைக்கு ஐநா முற்றுப்புள்ளி வைக்கும் எனும் நம்பிக்கையை மேற்கு நாடுகள் காலில் போட்டு மிதித்துள்ளன" என்று விமர்சித்துள்ளார். இதன் மூலம் காசாவில் நிகழும் வன்முறையை தடுக்கும் முயற்சிக்கு மேற்கு நாடுகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன.












Click it and Unblock the Notifications