நேம் சேஞ்ச்.. ஆபிஸ் சேஞ்ச்.. அடுத்து என்ன? ட்விட்டர் அலுவலகத்தில் எலான் மஸ்க்! பிளான் என்ன தெரியுமா?
நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் உலகின் மிகப்பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் ஐடியில் தன்னை ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் என அடையாளப்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறியிருந்த அவர், இடையில் இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்வதாக டிவிட்டர் அறிவித்தது.
இந்நிலையில், மீண்டும் டிவிட்டர் பங்குகளை வாங்கும் வேலையை மஸ்க் தீவிரப்படுத்தியுள்ளார்.

டிவிட்டர்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்குவதாக அறிவித்திருந்தார். அதாவது நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் ஒரு பங்கு தலா 54.20 அமெரிக்க டாலர் விகிதத்தில் வாங்குவதாக கூறியிருந்தார். ஆனால் டிவிட்டரில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதாக கூறி திடீரென இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

டீல்
டிவிட்டரை வாங்குவதாக கூறியதிலிருந்து அந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வரை அனைத்துமே பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் டிவிட்டர் பங்குகளை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து டிவிட்டர் நிறுவனம் சட்ட நடவடிக்கையில் இறங்கியது. எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்தது. இதனையடுத்து தற்போது இந்த வாங்கும் படலத்தை மஸ்க் மீண்டும் தொடங்கியுள்ளார். விரைவில் முழு பங்கையும் வாங்கிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

வழக்கு
இதற்காக கடிதம் ஒன்றையும் மஸ்க் டிவிட்டருக்கு அனுப்பியுள்ளதாக சொல்லப்பட்டது. இதனை டிவிட்டர் சமீபத்தில் உறுதி செய்தது.
இதற்கெல்லாம் காரணம் டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்குதான். அமெரிக்காவின் டெலாவர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணையில் டிவிட்டரின் முழு பங்குகளையும் வாங்க மஸ்க்குக்கு வரும் 28ம் தேதிதான் கடைசி நாள் என்று நீதிமன்றம் அவகாசம் தெரிவித்திருந்தது. எனவே இந்த டீலை முடிக்க மஸ்க் முழு முயற்சியில் இறங்கியுள்ளார்.

வீடியோ
இந்நிலையில் டிவிட்டர் தலைவர் என எலான் மஸ்க் தனது ட்விட்டர் ஐடியில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அதேபோல தனது தலைமை அலுவலகத்தையும் அவர் டிவிட்டர் அலுவலகத்திற்கு மாற்றி வருகிறார். இதற்கிடையில் கை கழுவும் 'சிங்க்கை' கையில் ஏந்தியவாறு டிவிட்டர் அலுவலகத்திற்கு அவர் செல்லும் வீடியோவை மஸ்க் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications