வாவ்.. சாதி பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் அமெரிக்க நகரம்.. குறுக்கே வந்த இந்து அமைப்புகள்
நாடு முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும் க்ஷாமா சாவந்த் கூறியுள்ளார்.
நியூயார்க்: இந்தியாவில் 1950ம் ஆண்டு சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்தியர்கள் அதிகம் வாழும் அமெரிக்காவிலும் சாதிய பாகுபாட்டிற்கு எதிராக தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் சியாட்டில் நகரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியர்களிடையே அதிக சாதிய பாகுப்பாடு பார்க்கப்படுவதாக அவ்வப்போது சில பிரச்னைகள் முன்னெழுந்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் வந்த பின்னரும் சாதியத்தை விடாமல் சிலர் இறுக பற்றிக்கொண்டிருப்பதாக அரசு அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து சியாட்டில் நகர சபையில் சாதிய பாகுபாட்டிற்கு எதிரான தீர்மானம் ஒன்று க்ஷாமா சாவந்த் எனும் இந்தியரால் முன்வைக்கப்பட்டது.
இவர் சியாட்டில் நகர சபை உறுப்பினராவார். இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதிகமானோர் வாக்களித்த நிலையில் தீர்மானம் வெற்றி பெற்று சட்டமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த சட்டத்தின்படி சாதிய பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும், நாடு முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும் க்ஷாமா சாவந்த் கூறியுள்ளார்.

சட்டம்
இந்த புதிய சட்டத்தின்படி, பணியமர்த்தல், பதவிக்காலம், பதவி உயர்வு, பணியிட நிபந்தனைகள் அல்லது ஊதியங்கள் ஆகியவற்றை சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் தீர்மானிப்பதை தடுக்க முடியும். மேலும், ஹோட்டல்கள், பொது போக்குவரத்து, பொது ஓய்வறைகள் அல்லது சில்லறை நிறுவனங்கள் போன்ற பொது இடங்களிலும் சாதிய பாகுபாட்டை தடை செய்யும். இது தவிர வாடகை வீட்டு குத்தகைகள், சொத்து விற்பனை மற்றும் அடமானக் கடன்கள் போன்றவற்றில் நிலவும் சாதிய பாகுபாடுபாட்டையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

நகரசபை
இதற்கான தீர்மானம் கொண்டு வந்தபோது இதற்கு எதிராக இந்து அமெரிக்கன் அறக்கட்டளை (HAF) போன்ற அமைப்புகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டன. இந்துக்களை தனிமைப்படுத்தவே இம்மாதிரியான சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக இந்த அமைப்புகள் குற்றம்சாட்டின. இருப்பினும் க்ஷாமா சாவந்த்தின் தீர்மானத்திற்கு 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவாக இருக்கின்றன. இதில் 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் அம்பேத்கரிய அமைப்பாகும். மட்டுமல்லாது தீர்மானத்திற்கு இந்திய வம்சாவளி அமெரிக்க அரசியல்வாதியும், அமெரிக்காவின் கீழவை உறுப்பினருமான பிரமிளா ஜெயபால் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையங்கள்
நகர சபையில் சாதிய பாகுப்பாடுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது இது முதல் முறையாக இருந்தாலும், இதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டு இதுபோன்ற தீர்மானங்கள் கல்வி நிலையங்களில் இயற்றப்பட தொடங்கிவிட்டன. போஸ்டனுக்கு அருகிலுள்ள பிராண்டீஸ் பல்கலைக்கழகம்தான் இந்த தீர்மானத்தை இயற்றிய முதல் அமெரிக்க பல்கலைக்கழகமாகும். இதனையடுத்து கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக அமைப்பு, கோல்பி கல்லூரி, பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவை இந்த தீர்மானத்தை இயற்றி வெற்றி கண்டன.

எதிர்ப்பு
கல்வி நிலையங்கள், அதனைத் தொடர்ந்து தற்போது நகர சபை என அனைத்து மட்டத்திலும் சாதிய பகுபாட்டிற்கு எதிராக தீர்மானம் இயற்றுவது என்பது இந்துக்களை தனிமைப்படுத்தும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications